ETV Bharat / state

பாஜக ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் ராஜினாமா - நிர்மல்குமாருடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!

author img

By

Published : Mar 8, 2023, 4:04 PM IST

தமிழக பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல்குமாருடன் பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

பாஜக
பாஜக

சென்னை: பாஜக தகவல் தொழிநுட்பப் பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜகவிலிருந்து விலகினார். அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அண்ணாமலை தனது சொந்த கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையுமே வேவு பார்க்கிறார் என்றும், கட்சியைப் பற்றி கவலைப்படாமல் அனைத்தையும் வியாபாரமாக பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். 420 மலையாக இருக்கும் நபரால், தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். இவரது இணைப்பு அதிமுக-பாஜக இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. குறிப்பாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்த நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்தது தவறு என்று எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்தனர்.

இதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகளையும், தனக்கான ஆதரவாளர்களையும் தொடர்ந்து அதிமுகவில் இணைத்து வருகிறார் நிர்மல்குமார். அதன்படி, அண்மைக்காலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டை முன்வைத்து, அக்கட்சியில் இருந்து பலரும் விலகுகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் நிர்மல்குமாருடன் இணைந்து பயணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

பாஜகவில் இருந்து விலகிய சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் ஓரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியில் சில காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்தது. ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்கின்றனர். ஒரே சமயத்தில் அழைக்க முற்படும் பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே, என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜகவில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான். பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் நான் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும், புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை.

துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் இது. நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜகவில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள். என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களது வலியுறுத்தலின் பேரிலும், அன்புக்குரிய தலைவர் நிர்மல் குமாருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "பாஜகவினர் அதிமுகவில் இணைவதை அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்க வேண்டும்" - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.