ETV Bharat / state

எதிர்பாராமல் பெய்யும் கனமழை; சேதங்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்!

author img

By

Published : Jun 19, 2023, 12:27 PM IST

Etv Bharat
Etv Bharat

எதிர்பாராத விதமாக ஜூன் மாதத்தில் ஆரம்பித்துள்ள மழைப் பொழிவை எதிர்கொள்ள, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பல பகுதிகளிலும் நேற்று முதல் திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் ஆரம்பித்த மழை இன்று காலை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கத்தில் 16 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிண்டி கத்திப்பாரா சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 1991ஆம் ஆண்டு மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் இவ்வாறு ஜூன் மாதத்தில் மழைப் பொழிவு இருந்தது. மழையின் காரணமாக, ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏரோபிளேன் ரிப்பேர் பாக்கலாம் : சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி

காஞ்சிபுரத்தில் சில இடங்களில் சாலைகளில் பெருமளவு தண்ணீர் வரும் அளவு மழைப் பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, இன்று காலை 6 மணி நிலவரப்படி 27.5 மி‌மீ., மழைப் பெய்துள்ளது. காலை 10 மணி நிலவரப்படி செங்கல்பட்டில் 9 மிமீ., மதுராந்தகம் 9 மிமீ., செய்யூர் 4 மிமீ., தாம்பரம் 1 மிமீ., கேளம்பாக்கம் 1 மிமீ., திருக்கழுக்குன்றம் 7 மிமீ., திருப்போரூர் 2 மிமீ. என மொத்தம் 33 மிமீ., மழைப் பதிவாகியுள்ளது.

இதனிடையே கனமழையால் ஏற்படும் சேதங்களை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் செய்து வைத்துள்ளது. மின்சார ஜெனரேட்டர்கள் 269, மின்சார ரம்பங்கள் 366, ஜேசிபி இயந்திரங்கள் 173, மின்கம்பங்கள் 4518, குடிநீர் லாரிகள் 91, மின்மாற்றிகள் 49, ஆம்புலன்ஸ்கள் 52, போன்றவை தயார் நிலையில் உள்ளன என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2746 மின் வாரிய ஊழியர்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் என 926 பேர் களத்தில் இறங்கத் தயார் நிலையில் உள்ளதாகவும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காங்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.