ETV Bharat / state

அயோத்தியில் இடம் பிடிக்கும் மாமல்லபுரம்! அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்கும் மாமல்லபுரத்தின் மரக்கதவுகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 10:41 AM IST

Updated : Jan 19, 2024, 5:38 PM IST

Ayodhya Ram Temple
அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்கும் மாமல்லபுரத்தின் மரக்கதவுகள்

Ayodhya Ram Temple: உலகமே உற்று நோக்கும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பங்களிப்பு இருப்பது, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்கும் மாமல்லபுரத்தின் மரக்கதவுகள்

செங்கல்பட்டு: 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்' என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பாஜக ஆட்சிக்கு வந்ததும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பல விமர்சனங்கள், சர்ச்சைகளைத் தாண்டி சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2019-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கியது.

பல தசாப்தங்களாக இந்திய மத மற்றும் அரசியல் சர்ச்சையின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்த அயோத்தி விவகாரம் ஒரு வழியாக முற்றுப்பெற்று, வரும் ஜன.22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயில், கட்டடக்கலைகளின் மூன்று பிரிவுகளில் ஒன்றான 'நாகரா' என்ற கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. நேபாளத்தை ஒட்டியுள்ள இமயமலையின் அடிவாரத்தின் அருகே ஹரி பர்வதம் என்ற மலையில், சங்கர தீர்த்தம் என்ற பகுதியில் கந்தகி நதி உற்பத்தி ஆகிறது.

இந்த நதியில் இருந்து ராமபிரானைக் குறிக்கும் சாளக்கிராமம் என்ற கருங்கல் கொண்டுவரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து நேற்று (ஜன.18) கோயில் கருவறைக்குள் 'ராமர் சிலை' பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த அருண் யோகி ராஜ் என்பவர் வடிவமைத்த ராமர் சிலை தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராமர் சிலையை வடிவமைத்த பெருமை கர்நாடக மாநிலத்துக்கு உரியது என்ற நிலையில், கோயிலின் கர்ப்பக்கிரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள கதவுகளை வடிவமைத்த பெருமை தமிழகத்துக்குக் கிடைத்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கலைஞனின் கைவண்ணத்தில் உருவான கதவுகள் ராமர் கோயிலில் பொருத்தப்பட்டு உள்ளன. இது குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு ரமேஷ் அளித்த பேட்டியில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ராமர் கோயில் கட்டுமானத்தை செய்யும் அறக்கட்டளையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க கோயிலின் மினியேச்சர் (Miniature) வடிவத்தை குறுகிய காலத்தில் உருவாக்கி அளித்தோம்.

அதனைத்தொடர்ந்து கோயிலில் கர்ப்பக் கிரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 18 கதவுகளை செய்து பொருத்தும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டது. 2023 ஜுலை துவங்கி அந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளோம். அதோடு மட்டுமல்லாமல், பாலாலயத்தில் இருந்த சிற்பத்தை கருவறைக்கு எடுத்துச் செல்ல பல்லக்கு ஒன்று வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, அதையும் உடனே செய்து விமானம் மூலமாக அனுப்பினோம்.

மொத்தத்தில் இந்த வாய்ப்பானது வட இந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான ஒரு நல்ல இணைப்புப் பாலம் என்றே நாங்கள் கருதுகிறோம்” என்றார். தற்போது ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ரமேஷ் அயோத்திக்குச் சென்றுள்ளார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மர சிற்பி ஒருவரின் பங்களிப்பு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: 18 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்!

Last Updated :Jan 19, 2024, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.