டிக்கெட் வாங்க மறுத்து, பயணி தாக்கியதில் கண்டக்டர் உயிரிழப்பு

author img

By

Published : May 14, 2022, 12:22 PM IST

டிக்கெட் வாங்க மறுத்து, பயணி தாக்கியதில் கண்டக்டர் பலி

டிக்கெட் வாங்கச் சொல்லி நடத்துனர் கேட்டதால், ஆத்திரமடைந்த பயணி தாக்கியதில், ஓடும் பேருந்தில் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு:, சென்னையில் இருந்து பயணிகளுடன் இன்று (மே14) அதிகாலை விழுப்புரத்திற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெருமாள் பிள்ளை (54) என்பவர், நடத்துனராகப் பணியில் இருந்தார். பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலையில் நின்றபோது, பயணி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.

அவரிடம் நடத்துனர் பெருமாள் பிள்ளை, 'எங்கே செல்லவேண்டும்?' என்று கேட்டு பயணச்சீட்டு வாங்கச் சொல்லியுள்ளார். அதற்கு அந்தப் பயணி, தான் போக்குவரத்துத் துறையில் பணி புரிவதாகக் கூறியுள்ளார். நடத்துனர் அடையாள அட்டை கேட்டதற்கு அந்த நபர் ஆதார் அட்டையைக் காட்டி உள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த பெருமாள், அந்த நபரிடம் பயணச்சீட்டு வாங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் நடத்துனரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பயணிகள் தலையிட்டு அந்த நபரை பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளனர். ஆனால் பேருந்து சற்று தூரம் சென்ற போது, நடத்துனர் பெருமாள் பிள்ளை மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு, ஓட்டுனரும் பயணிகளும், நடத்துனர் பெருமாள் பிள்ளையை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பெருமாள் பிள்ளை உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகத்தினர், மதுராந்தகம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

உடனடியாக செயல்பட்ட மதுராந்தகம் காவல்துறையினர், நடத்துனரை தாக்கிய சூனாம்பேட்டைச் சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். டிக்கெட் வாங்கச் சொல்லிக் கேட்டதால் தாக்கப்பட்ட நடத்துனர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கு: கைதான 2 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.