உணவகங்களில் கொடியசைத்து கவரும் யுக்தி சரியா? - மனிதம் காப்போம்

author img

By

Published : Sep 14, 2021, 5:37 PM IST

மனிதம் காப்போம்

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் கொடியசைத்து வாடிக்கையாளரை கவரும் யுக்தி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற உணவகங்களின் கிளைகள், அந்தந்த வட்டாரங்களில் பெயர்பெற்ற உணவகங்கள், சாதாரண உணவகங்கள் என பல உணவகங்கள் நெடுஞ்சாலைகளின் ஒரம் கோலோச்சி வருகின்றன.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள், இந்த உணவகங்களில் உணவருந்த வருகின்றனர். பல வகைகளில் கிடைக்கும் உணவுகளை உண்கின்றனர். பெரும்பாலான இத்தகைய உணவகங்கள், உணவருந்த மட்டும் என்று இல்லாமல், சற்றே இளைப்பாறி பொழுதுபோக்கவும் உதவுகின்றன. உணவகங்களின் பிரமாண்டத்தில், உணவு வகைகளின் சுவையில் மகிழும் நாம், பல உணவகங்களிலும் காணப்படும் சில பாவப்பட்ட மனிதர்களை கவனிக்கத் தவறுகிறோம்.

மனிதம் காப்போம்

சாலைகளில் பயணிக்கும் பொழுது நமது கவனத்தை ஈர்த்து, தாங்கள் பணிபுரியும் உணவகத்திற்கு நம்மை வரவேற்கும் விதமாக கொடியசைத்துக் கொண்டு நிற்கும் மனிதர்கள் தான் அவர்கள். சில உணவகங்கள் தவிர்த்து பெரும்பாலான உணவகங்கள், இத்தகைய மனிதர்களை பணிக்கு வைத்துள்ளனர். வெயிலோ மழையோ, கால்கடுக்க நெடுஞ்சாலையோரம் நின்று, இயந்திரத்தனமாக கொடியை அசைத்துக் கொண்டு நிற்கும் இவர்களை எத்தனை பேர் கவனித்திருப்போம்?.

நம்முடைய பயண பரபரப்பு, பசி களைப்பு போன்றவற்றில் அவர்களை மனதில் நிறுத்தி இருக்கமாட்டோம். ஒரு வேளைக்கு பலநூறு செலவழித்து உணவகங்களில் உண்ணும் நாம், அந்த கொடிகாத்த குமரனின் ஒருநாள் வருமானம், நாம் ஒரு வேளைக்கு செலவழித்த உணவுக்கான பணத்தில் பாதி கூட இருக்காது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 6000 முதல் 8000 வரையான மாத சம்பளத்திற்கு, இவர்கள் கொடியசைத்து நம்மை வரவேற்கின்றனர். பெரும்பாலான உணவகங்களில் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பது கொடுமையான உண்மை.

ஒரு சில இடங்களில், ஒரு கையில் சிறு குடையும், மறுகையில் கொடியுமாக பரிதாபமாக நிற்கின்றனர். பல இடங்களில் வெட்டவெளியில் நின்று தான் கொடியசைத்துக் கொண்டுள்ளனர். பல மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டிருக்கும் இவர்களுக்கு, ஓய்வெடுக்கும் வகையிலோ சிறிது உட்காரும் வகையிலோ ஒரு நாற்காலி கூட வழங்கப்படுவதில்லை. இத்தகைய பணிக்கு பெரும்பாலும் சற்றே வயதான நபர்கள் தான் வருவார்கள் என்பதால், இதன் வீரியம் மனசாட்சி உள்ளவர்களை உலுக்கவே செய்யும்.

நாளொன்றுக்கு சில கிலோமீட்டர் நடக்க சொன்னாலும் மனிதர்களால் நடந்து விட முடியும். ஆனால், பல மணி நேரங்கள், ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல் நின்றுகொண்டு, இயந்திரத்தனமாக கொடியசைப்பது என்பது உளவியல் ரீதியாக மிகப்பெரிய சித்திரவதை. பல இடங்களில் கொடியசைப்பதோடு, வாகனங்களை நிறுத்த, எடுக்க உதவும் பார்க்கிங் அசிஸ்டன்ட்களாகவும் இவர்களே செயல்படுகின்றனர். அப்போது வாகன உரிமையாளர்கள் சிலர் கொடுக்கும், ஐந்து ரூபாய் பத்து ரூபாய் மட்டுமே, இவர்களின் அன்றைய செலவிற்கு உதவும் அரும்பணம்.

அதில் சோகம் என்னவெனில் அவ்வாறு கிடைக்கும் பணத்தைக் கொண்டு கூட, அவர்கள் பணி புரியும் உணவகங்களில் உணவருந்த முடியாது. அந்தப் பணம் போதாது. கேரள மாநிலத்தில், இத்தகைய கொடி யசைப்போரை, உணவகங்கள் தக்க முறையில் பராமரித்து, அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்ற கருத்து எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு அரசாங்கம் இதுகுறித்த விழிப்புணர்வு, அறிவுரைகளை உணவகங்களுக்கு அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களுக்கான தகுந்த, குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், பணி செய்யும் இடத்திலேயே இலவச உணவு, நிழல் தரும் குடைகள், ஓய்வெடுக்க நாற்காலி போன்றவற்றை உணவகங்கள் இவர்களுக்கு வழங்குவது கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அடுத்த முறை இத்தகைய உணவகங்களில் உணவருந்த செல்லும் நாம், சிறு புன்னகையுடன் அவர்களை அங்கீகரித்து மகிழ்வதே, நம்மால் அவர்களுக்கு செய்ய முடிந்த உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க: ’நீட் தேர்வு விலக்குக்கு போராட தயாராக வேண்டும்’ - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.