காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டி.எஸ்.பி - பின்னணி என்ன?

author img

By

Published : May 21, 2023, 11:41 AM IST

illicit liquor death - madurantakam DSP in waiting list

கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை துவங்கப்பட்ட நிலையில், மணிமேகலை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

செங்கல்பட்டு: கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய மதுராந்தகம் டி.எஸ்.பி மணிமேகலை, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் எல்லைக்கு உட்பட்ட இரு கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு அரசியல், காவல் துறை, போன்றவற்றில் மட்டுமல்லாது பல மட்டங்களிலும் அதிர்வலைகளை எழுப்பியது. கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு சிலரது ஆதரவையும் பலரது எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றது. அதுபோல இந்த விவகாரத்தில் காவல் துறையினர் சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதிலும் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், பிரச்னையின் அழுத்தம் காரணமாக அவசரமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

உதாரணமாக, பிரச்னையின் மூலகாரணமாக விளங்கும் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்த குற்றவாளிகள் செய்யூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஓதியூர் மற்றும் பனையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்கள் சித்தாமூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் மேல்மருவத்தூர், சித்தாமூர் சரக ஆய்வாளர் பிரேம் ஆனந்த்‌. இவர் சம்பவம் நடந்தபோது செய்யூர் காவல் நிலையத்திற்கும் தற்காலிகமாக பொறுப்பு வகித்தார் என வைத்துக் கொண்டாலும், அந்தப் பகுதியில் பல வருடங்களாக கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்த செய்யூர் அதிகாரிகள் தப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல் கலால் பிரிவில் உதவி ஆய்வாளர் ஒருவரும் துணைக் கண்காணிப்பாளர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் கலால் ஆய்வாளர் அலெக்ஸ் என்பவர் அயல் பணியாக தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்ததால், அவரும் நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பிவிட்டார் என போலீசாரே புலம்புகின்றனர்.

ஆனால், நல்ல அதிகாரி எனப் பெயர் வாங்கிய மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த நிலையில், பிரதீப், மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே கள்ளச் சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமாவாசை என்பவர், தானும் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாக நாடகமாடி மருத்துவமனையில் படுத்துக் கொள்ள, சரிவர விசாரிக்காமல் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் சுதாரித்துக் கொண்ட அரசு அவருக்கு வழங்கவிருந்த நிவாரணத்தை நிறுத்தியது‌.

அமாவாசைக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, நாடகமாட ஐடியா கொடுத்தது ஒரு அரசியல்வாதியும், சில போலீசாரும் எனப் பேச்சுகள் எழுந்த நிலையில் அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனிடையே இதுகுறித்த செய்தி வெளியிட்ட ஊடக நிருபரிடம் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலர் வாக்குவாதம் செய்து, அதன்பின் அவர் நிர்வகித்து வந்த செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வாட்ஸ்அப் குழுவிலிருந்து பல செய்தியாளர்களை கோபத்தில் நீக்கும் அளவு நிலைமை சிக்கலானது. சம்பவம் நடைபெற்ற மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தில் டிஎஸ்பி-யாக மணிமேகலை என்பவர் இருந்தார்.

ஆரம்பம் முதலே இவர் மீது பல சர்ச்சைகள் இருந்து வந்தன. ஒரு கட்டத்தில் போலீசார் வாய்விட்டுப் புலம்பும் அளவு இவரின் செயல்பாடுகள் இருந்து வந்தன. கள்ளச்சாராய பலிகள் விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை துவங்கப்பட்ட நிலையில் மணிமேகலை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பணியில் இருந்த சிவசக்தி என்பவர் தற்போது மதுராந்தகம் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை சூடுபிடிக்கும் நிலையில் இன்னும் பல அதிகாரிகள் சிக்க உள்ளனர் என்கிறது, சிபிசிஐடி தரப்பு

இதையும் பட்டிங்க: "இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி"- அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.