ETV Bharat / state

பார் உள்ளே புகுந்து ஊழியர் மீது சரமாரி தாக்குதல்; பணத்துடன் தப்பிய நான்கு பேர் கைது!

author img

By

Published : Apr 13, 2023, 2:56 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் பாரின் ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Four youth arrested for attacking a bar employee with a Bill Hook and stealing money near Guduvanchery
கூடுவாஞ்சேரி அருகே பார் ஊழியரை அரிவாளால் தாக்கிவிட்டு பணத்தை திருடிச் சென்ற நான்கு பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே பார் ஊழியரை அரிவாளால் தாக்கிவிட்டு பணத்தை திருடிச் சென்ற நான்கு பேர் கைது

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூரில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக்கில் தனியாரால் நடத்தப்படும் பார் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் ராமச்சந்திரன் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மதுபானக் கடையிலேயே தங்கி வேலைசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு நேரத்தில் பாரில் ராமச்சந்திரன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நான்கு நபர்கள், பாரின் கதவுக்கு வெளியே நின்றபடி மதுபானம் மற்றும் பணம் கேட்டு ராமச்சந்திரனை மிரட்டியுள்ளனர்.

ராமச்சந்திரன் பணம் தர மறுத்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் ராமச்சந்திரனை தலை, கால் என சரமாரியாக வெட்டி அவரைக் கீழே தள்ளிவிட்டனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தூக்கிக்கொண்டு தப்பியோடி விட்டனர்.

இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் ராமச்சந்திரன் சரிந்து கீழே விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசித் தேடி வந்தனர்.

இந்நிலையில் பார் ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை திருடிச்சென்ற வழக்கில், சிங்கபெருமாள் கோயில் அடுத்த தெல்லிமேடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), ஆத்தூர் கணபதி நகரைச் சேர்ந்த கர்ணன் (34), வேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20), மற்றும் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (22) உள்ளிட்ட நான்கு பேரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நான்கு பேர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்கள் பார் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: காவல்நிலையத்தில் இரண்டுபேர் அடித்துக்கொலை; டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.