வீட்டில் மூலிகைத்தோட்டம் அமைக்க விருப்பமா? 50 சதவீத மானியமும் உண்டு!

author img

By

Published : Feb 24, 2023, 3:44 PM IST

வீட்டில் மூலிகை தோட்டம் அமைக்க மானியம்

மூலிகைத்தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு 50 சதவீதம் மானியத்தில் செடிகள் வழங்கப்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2022-23-ம் நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு 300 மூலிகைத்தோட்டங்கள் அமைக்க ரூ.2.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும், மூலிகைத்தோட்டம் அமைக்க ரூ.1,500 மதிப்பில் துளசி, கறிவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி, புதினா, வல்லாரை, திப்பிலி, பிரண்டை, லெமன் கிராஸ் மற்றும் இன்சுலின் ஆகிய பத்து வகையான மூலிகைச் செடிகளும், செடிகள் வளர்ப்பதற்கான செடிகள் வளர்ப்பு பைகள் 10 எண்ணிக்கை, 20 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண் புழு உரம் ஆகியவை அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளோர் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்கூடிய ஆவணங்களுடன் www://tnhorticulture.gov.im/kit.new என்ற இணையதளத்தில் பதிவு செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செலுத்திட வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.