ETV Bharat / state

'வண்டல் மண் வேணுமா முகாமுக்கு வாங்க' அரியலூர் ஆட்சியர் அழைப்பு!

author img

By

Published : Jan 25, 2023, 12:38 PM IST

அரியலூர் ஆட்சியர்
அரியலூர் ஆட்சியர்

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விரும்புவோர், சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியலூர்: வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்டத்தில் சிறப்பு முகாம் ஃஅடத்தப்படவுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, “2021-22 ம் ஆண்டு முதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி, அக்கிராமப் பஞ்சாயத்துகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நடப்பு ஆண்டில் இத்திட்டம், அணிக்குதிச்சான், அய்யூர், கொளத்தூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான், பெரிய கருக்கல், ஒட்டக்கோவில், கருப்பில்லாக்கட்டளை, சென்னிவனம், வெங்கட கிருஸ்ணாபுரம், கல்லங்குறிச்சி, அஸ்தினாபுரம், கோமான், உட்கோட்டை, இளையபெருமாள்நல்லூர், தேவமங்கலம், வெத்தியார்வெட்டு, கழுவந்தோண்டி, பெரிய வளையம், கழுமங்கலம், நாகமங்கலம், செந்துறை, பிலாக்குறிச்சி, நல்லாம்பாளையம், குமிழியம், வீராக்கண், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், காசான்கோட்டை, நடுவலூர், அணைக்குடம், கோடங்குடி, மணகெதி, வெற்றியூர், வாரணவாசி, திருமழப்பாடி, வெங்கனூர், மலத்தான்குளம், செம்பியக்குடி மற்றும் விழுப்பணங்குறிச்சி ஆகிய 42 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது, வேளாண்மை - உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட 42 கிராம பஞ்சாயத்துகளில் உழவர்களுக்கான முகாம் 09.02.2023 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும்.

மேலும் உழவன் செயலியை விவசாயிகளின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன்பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், PM-KISAN திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் குடற்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமல்லாது இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

முகாம் நடைபெறும் நாட்களில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் அம்முகாம்களில் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட 42 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள வேளாண் பெருமக்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயன் பெறுமாறு வேண்டப்படுகிறார்கள். இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை - உழவர் நலத்துறையின் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.