பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்தல் - முக்கிய குற்றவாளி கைது

author img

By

Published : Feb 15, 2023, 7:30 PM IST

Etv Bharat

போரூரில் பத்திரிகையாளர் போர்வையில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த முக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்த 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை போரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி வந்த சூர்யா (30), பிரவீன் (29) ஆகிய இரு நிருபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலுக்கு தலைவனாக வினோத் குமார் (37) என்பவர் செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், உதவி ஆய்வாளர்கள் பிரதீப், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் திருவேற்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத் குமார், அவரது உறவினர் தேவராஜ், பாலாஜி உட்பட மூன்று பேரை போரூர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு பத்திரிகையில் ஆசிரியராக இருந்துகொண்டு தனக்கு தெரிந்தவர்களுக்கு நிருபர் என அடையாள அட்டைகளை கொடுத்து, கஞ்சா சப்ளையில் ஈடுபட்டதும், லோடு வேனில் வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி, அதே லாரியில் பொருட்களுடன் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.

அப்படி வருகையில், காவல் துறையினர் மடக்கி விசாரித்தால் வீட்டை காலி செய்து, வேறு வீடு மாறி செல்கிறோம் என்றும், தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்றும் காவல் துறையினரிடம் கூறி அடையாள அட்டையை காண்பித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இது போல பலமுறை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், கடந்த ஒன்றரை ஆண்டில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் வரை பணப் பறிமாற்றம் நடைபெற்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள், வீடு காலி செய்து பொருட்களை எடுத்துச்செல்வது போல் அமைத்து வைத்திருந்த வேன் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: யாருகிட்ட காசு கேக்குற.? ஆட்டோ ஓட்டுநரை இரும்புக்கம்பியால் தாக்கிய வடமாநில இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.