ETV Bharat / state

இடது கை துண்டிக்கப்பட்டால் இழப்பீடு உண்டா இல்லையா? அரியலூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

author img

By

Published : Mar 27, 2023, 5:04 PM IST

Updated : Mar 27, 2023, 6:01 PM IST

அரியலூர் கோர்ட்
அரியலூர் கோர்ட்

இடது கை துண்டிக்கப்பட்டால் காப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது என்று வாதிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த அரியலூர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

அரியலூர் மாவட்டம், தெற்கு தெரு என்ற கிராமத்தைச்சேர்ந்தவர், ராமலிங்கம். அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது, ''கும்பகோணத்தில் இயங்கி வரும் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் வீடு கட்ட எனது மனைவி தமிழரசி பெயரில் வீட்டுக்கடன் பெற்றோம்.

கடன் கொடுத்த மேற்படி நிறுவனத்தார், தாங்கள் நவி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன (பழைய பெயர் DHFL) முகவராக இருக்கிறோம். எங்களிடம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் முழு குடும்பத்திற்கும் விபத்து காப்பீடு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் பாலிசி எடுத்தோம். பாலிசியானது 28.02.2019 முதல் 27.02.2024 வரை செல்லுபடியாகும். இந்நிலையில் வேலைக்காக கேரளா சென்றேன். அங்கு ஏற்பட்ட விபத்தில் இடது கை நசுங்கியது. எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இடது கையை துண்டிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றனர்.

இடது கை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து காப்பீடு நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால், இழப்பீடு வழங்கவில்லை. காப்பீடு இழப்பீடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஆஜரான இன்சூரன்ஸ் நிறுவன வழக்கறிஞர், இன்சூரன்ஸ் நிறுவன விதிகளின்படி இடதுகை துண்டிக்கப்பட்டால் இழப்பீடு கிடையாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், பாலிசி பெற்றுள்ளார். பாலிசி நடப்பில் உள்ளது. ஆனால், இடது கை துண்டிக்கப்பட்டால் இழப்பீடு கிடையாது என்பது ஏற்க இயலாது.
இடது கை துண்டிக்கப்பட்டது தொடர்பான மருத்துவ ஆதாரங்கள் உள்ளன.

மனுதாரரை நேரில் பார்த்தபோது அவருக்கு இடது கை இல்லை. அவரது உடலில் இருந்து இடது கை துண்டிக்கப்பட்டு நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது. இதில் இடது, வலது என்பது பேதமில்லை. எனவே, இன்சூரன்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ரூபாய் 8 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு கும்பகோணம் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், ரூபாய் 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கான இழப்பீடாக வழங்க வேண்டும்'' இவ்வாறு தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக அவர் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் இந்த தீர்ப்பும் அவரது தீர்ப்பின் முத்திரையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.500 கட்டினால் ரூ.2000-க்கு பொருட்கள்.. 8 லட்சம் அபேஸ் செய்த காங்கிரஸ் நிர்வாகி கைது!

Last Updated :Mar 27, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.