ETV Bharat / state

நீங்கள் தேவாலய பணியாளரா..? நல வாரியத்தில் சேருங்கள்..! - வெளியான முக்கிய அறிவிப்பு!

author img

By

Published : Mar 17, 2023, 4:48 PM IST

Etv Bharat
Etv Bharat

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர்: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000/-மும் வழங்கப்படும்.

விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரையும், இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.20,000/-மும், ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000/-மும், திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000/-மும், பெண்களுக்கு ரூ.5,000/-மும் வழங்கப்படும்.

மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000/-மும், கருச்சிதைவு/கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000/-மும், கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500/-ம், முதியோர் ஓய்வூதியமாக (மாதந்தோறும்) ரூ.1,000/-மும் நலத்திட்ட உதவியாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.16) தொடர்பு கொள்ளலாம். மேற்படி இந்நலவாரியத்தில் தகுதியுடைய நபர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வழங்காததால் அவலம் - தங்கையின் சடலத்தை 10 கி.மீ துமந்து சென்ற அண்ணன்! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.