ETV Bharat / sports

டி20 தொடருக்கான இந்திய அணியில் சாஹா தேர்வு செய்யப்படாதது ஏன்? - முன்னாள் தேர்வாளர்கள் அதிருப்தி!

author img

By

Published : May 27, 2022, 4:58 PM IST

saha
saha

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில், இந்திய அணியில் மூத்த கிரிக்கெட் வீரர் சாஹா தேர்வு செய்யப்படாதது குறித்து, முன்னாள் தேர்வாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 37 வயதிலும் சாஹா சிறப்பாக விளையாடுகிறார் என்றும், இந்திய அணிக்கு அவர் சிறப்பான தேர்வாக இருந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அறிமுக வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பராக விளங்கும் விருத்திமான் சாஹா டி20 தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தேர்வருமான திலீப் வெங்சர்கார் கூறுகையில், "சாஹா சிறப்பான விக்கெட் கீப்பர். சாஹாவின் வயது 37, தினேஷ் கார்த்திக்கின் வயது 36. வயதை அடிப்படையாக கொண்டு வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்றால், கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்ட சாஹா, தினேஷ் கார்த்திக் இருவருமே தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது இருவருமே தேர்வு செய்யாமல் விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிரிக்கெட்டில் பல சந்தர்ப்பங்களில் எந்த விஷயங்களும் நிலையாக இருப்பதில்லை. லாஜிக்கே இல்லாமல் வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.

ஆம், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விருத்திமான் சாஹாவும், தற்போது சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கும் சமமான திறமை கொண்டவர்கள். இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இருவரது ஆட்டத்திலும், செயல்திறனிலும் ஒற்றுமைகள் உள்ளன.

ஐபிஎல் பேட்டிங் தர வரிசையில், தினேஷ் கார்த்திக் 15 போட்டிகளில் 324 ரன்கள் குவித்து, 25ஆவது இடத்தில் உள்ளார். மறுபுறம் சாஹா 10 போட்டிகளில் 312 ரன்களை குவித்துள்ளார். இங்கு தினேஷ் கார்த்திக் ஏன் தேர்வு செய்யப்பட்டார், சாஹா ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தேர்வாளர்களின் மனநிலை குறித்து எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஒரு ஃபினிஷர் தேவை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்திருக்கலாம். தினேஷ் கார்த்திக் தோனியைப் போல விளையாடலாம்" என்று கூறினார்.

இதுதொடர்பாக பேசிய மற்றொரு தேர்வாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ராஜா வெங்கட், "தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு, சாஹா தேர்வு செய்யப்படாததாது கண்டிப்பாக தேர்வுக்குழுவின் இரட்டை நிலைதான். சாஹா, நாட்டின் சிறந்த விக்கெட் கீப்பர் மட்டுமல்லாமல், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி டெஸ்டில், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். வீரர்கள் தேர்வுக்கு வெவ்வேறாக விதிகளை வைப்பது வித்தியாசமாக இருக்கிறது.

ரிஷப் இந்தியாவுக்காக ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவர் முற்றிலும் நிலைத்தன்மை அற்றவர். எனது பார்வையில், சாஹாவை முதல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்திருக்க வேண்டும்.

ரிஷப் பந்த் தனது விக்கெட் கீப்பிங்கை மேம்படுத்தவும், பேட்டிங் திறமையை சீராக்கவும் நேரம் கொடுக்க வேண்டும். பிறகு அவர் மீண்டும் களமிறக்கப்படலாம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை ஹாக்கியில் இந்தியா 16 கோல் அடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.