ETV Bharat / sports

GT vs PBKS: ரபாடா, லிவிங்ஸ்டன் அசத்தல்; குஜராத்தை வென்றது பஞ்சாப்

author img

By

Published : May 4, 2022, 7:48 AM IST

GT vs PBKS
GT vs PBKS

குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ககிசோ ரபாடா தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 3) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது.

தொடர்ந்து, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் தாக்குதலால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த குஜராத், ரன்களை குவிக்கவும் திணறியது. பஞ்சாப் பந்துவீச்சாளர்களான ரபாடா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி, குஜராத் அணி 143 ரன்களில் கட்டுப்படுத்தினர். ராகுல் சஹார் 1.3 ஓவர்களை வீசிய நிலையில், காயம் காரணமாக வெளியேறினார்.

சாய் சுதர்சன் ஆறுதல்: குஜராத் அணி பேட்டிங்கில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இறுதிவரை போராடி 65 (50) ரன்களை எடுத்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனர் பேர்ஸ்டோவ் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும், பின்னர் ஆடிய தவான் - ராஜபக்சே ஜோடி குஜராத் பந்துவீச்சை நாலாப்புறம் பறக்கவிட்டது.

இந்த ஜோடி 87 ரன்களை குவித்த நிலையில், ராஜபக்சே 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, லியம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். தவான் நிதானமாக விளையாடி வந்த நிலையில், லிவிங்ஸ்டனுக்கு பெரிதாக ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. இதையடுத்து, ஷமி வீசிய 16ஆவது ஓவரில் லிவிங்ஸ்டனுக்கு ஸ்ட்ரைக் கிடைக்க முதல் பந்தையே 117 மீட்டர் உயரத்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். அடுத்தடுத்து, இரண்டு சிக்ஸர்கள் என ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த அவர், அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை குவித்து ஆட்டத்தை அந்த ஓவரிலேயே முடித்துவைத்தார்.

இதன்மூலம், பஞ்சாப் 4 ஓவர்களை மீதம் வைத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. தவான் 62 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். புள்ளிகள் பட்டியலில், பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 5 தோல்விகள்) 5ஆவது இடத்திலும், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் (8 வெற்றி, 2 தோல்வி) முதல் இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க: KKR vs RR: ரிங்கு சிங் அதிரடியால் ராஜஸ்தானை பழிதீர்த்தது கேகேஆர் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.