ETV Bharat / sports

MI vs LSG: சச்சினை ஏமாற்றிய மும்பை - தொடர்ந்து 8ஆவது தோல்வி; ராகுல் சதம்!

author img

By

Published : Apr 25, 2022, 7:39 AM IST

MI vs LSG
MI vs LSG

நடப்பு ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில், மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் வீழ்ந்து, தொடர்ச்சியாக 8ஆவது தோல்வியை தழுவியுள்ளது. சச்சினின் பிறந்தநாளிலும் மும்பை அணி தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

வான்கடே: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், கிரிக்கெட் ஆர்வலர்கள், வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். . மேலும், கூடுதல் சிறப்பாக, சச்சினின் பிறந்தநாளான நேற்று, அவர் ஆலோசகராக பணிபுரியும் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டி, சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரும் பங்கை வகிக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

169 ரன்கள் இலக்கு: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணிக்கு, 169 ரன்களை லக்னோ இலக்காக நிர்ணயித்தது. மும்பை அணிக்கு, கடந்த 7 போட்டிகளாக ஓப்பனிங்கில் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் அந்த அணிக்கு இஷான் கிஷன் மெதுவாக ஆடினாலும், ரோஹித் பவுண்டரிகள் மூலம் ரன்களை குவித்து வந்தார்.

சரிந்த இமயங்கள்: மும்பை அணி, பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை எடுத்து ரன்ரேட்டை 7-இல் வைத்திருந்தது. ஸ்கோர் நிதானமாக உயர்ந்து வந்தபோது, மும்பை பேட்டர்கள் இஷான் கிஷன் 8 (20), டிவால்ட் பிரீவிஸ் 3 (5), ரோஹித் சர்மா 39 (31), சூர்யகுமார் யாதவ் 7 (7) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், ரன்வேகம் குறைந்தது. தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா - கைரன் பொல்லார்ட் ஜோடி சிங்கிள், டபுள்ஸ் என ஓடி ஓடி ரன்களை சேர்த்தாலும், பவுண்டரிகளை அடிக்க மிகவும் திணறியது.

கடைசி ஓவரில் 3 விக்கெட்: 12ஆவது ஓவரில் சேர்ந்த ஜோடி 18ஆவது ஓவர் வரை தாக்குபிடித்து 57 ரன்களை சேர்த்தது. ஆறுதல் அளித்த திலக் வர்மா 38 (27) ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறுதி ஓவரில் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது.

சதமடித்த ராகுல்: இதன்மூலம், லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. முன்னதாக, லக்னோ பேட்டிங்கில் கேப்டன் ராகுல் தனியாளாக போராடி, இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தையும், ஒட்டுமொத்த ஐபிஎல்-இல் தனது 4ஆவது சதத்தையும் பதிவுசெய்தார். அவர், 60 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 103 குவித்திருந்த நிலையில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சச்சினின் பிறந்தநாளில் தோல்வி: தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியை தழுவி வந்த மும்பை, சச்சின் பிறந்தநாள் அன்றாவது மீண்டெழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் அந்த அணி ஓரளவுக்கு கூட போராடமல், ஒட்டுமொத்தமாக சரணடைந்தது சச்சின் ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. மேலும், 8 தோல்விகளுடன் மும்பை, புள்ளிகள்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்துவரும் நிலையில், லக்னோ அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 3 தோல்வி) 4ஆவது இடத்தில் உள்ளது.

PBKS vs CSK: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 25) நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் - சென்னை அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில், இவ்விரு அணிகளும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி மோதின. அதில், பஞ்சாப் அணி, 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. எனவே, மும்பையை தோற்கடித்து நம்பிக்கையுடன் களம்காணும் சென்னை, பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: SRH vs RCB: 'கோலி மீண்டும் டக்' - ஆர்சிபியை 68 ரன்களில் அடக்கி ஆண்ட எஸ்ஆர்ஹெச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.