SRH vs PBKS: கடைசி ஓவர் வரை பரபரப்பு; இம்முறை பஞ்சாப் வெற்றி

author img

By

Published : Sep 26, 2021, 6:24 AM IST

Updated : Sep 26, 2021, 6:58 AM IST

PBKS

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த போட்டியைப் போலவே கடைசி ஓவர்வரை பரபரப்பாக கொண்டு பஞ்சாப் அணி, இம்முறை வெற்றிபெற்றுள்ளது.

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் நேன்று (செப். 25) நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹோல்டர் அட்டாக்

அதன்படி, ஹைதராபாத் அணியின் முதல் நான்கு ஓவர்களை புவனேஷ்வர், சந்தீப் சர்மா இணை வீசியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், மயாங்க் ஆகியோர் இவர்களின் பந்துவீச்சை சற்று தாக்குபிடித்து விக்கெட்டை இழக்காமல் 24 ரன்களை சேர்த்தனர்.

ஆனால், ஹோல்டர் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே கே.எல். ராகுல் 21 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் மயாங்க் 5 (6) ரன்களில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹோல்டர் அந்த ஓவரில் வெறும் 1 ரன்னை கொடுத்து, இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரஷித் vs கெயில்

இதன்பின்னர், மார்க்ரம் உடன் இணைந்த கெயில் மிகப் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை சேர்த்திருந்தது.

செட்டிலான பின்பு அதிரடியை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயிலை, 14 (17) ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார், ரஷித் கான். தொடர்ச்சியாக இரண்டு கூக்ளிக்களை வீசிய ரஷித், அடுத்த பந்து திடீரென ஒரு லெக்-பிரேக்கை வீசி கெயிலை சாய்த்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ரஷித் கான் கெயிலுக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி, 15 பந்துகளை வீசியுள்ளார். அதில் வெறும் 11 ரன்களை கொடுத்து, 3 முறை கெயிலின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.

126 ரன்கள் இலக்கு

கெயில் வெளியேற்றத்திற்கு பின் களம் கண்ட பூரன், சந்தீப் சர்மாவின் ஒரு பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார். அந்த மிரட்சி வடிவதற்குள், அடுத்த பந்தில் சந்தீப் சர்மாவிடமே கேட்ச் கொடுத்த பூரன் 6 (4) ரன்களில் வெளியேறினார். நீண்ட நேரம் போராடி வந்த மார்க்ரம் 27 (32) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த ஓவரில் ஹூடா 13 (10) ரன்களில் நடையைக் கட்ட, 16 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை சேர்த்திருந்தது. கடைசி ஓவரை வரை தாக்குபிடித்த நாதன் எல்லிஸ் 12 (12) ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது. ஹர்பிரீத் பிரர் 18 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி பந்துவீச்சில் ஜேசான் ஹோல்டர் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைய கைப்பற்றி அசத்தினார்

சொதப்பிய பேட்டிங்

இதன்பின்னர், களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கும் தொடக்கம் மோசமானதாகவே அமைந்தது. முதல் மற்றும் மூன்றாவது ஓவர்களில், முகமது ஷமி வார்னர், வில்லியம்சன் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் சென்றது. அப்போது பாண்டே 13 (23), கேதர் ஜாதவ் 12 (12), அப்துல் சமத் 1 (2) ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரராத களமிறங்கிய சாஹா 31 ரன்களில் ரன்-அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை ஹோல்டர் வெளிப்படுத்தினார். ஆனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஹைதராபாத் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆட்டநாயகன் ஹோல்டர்

இதன்மூலம், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹைதராபாத் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 47 (29) ரன்களை எடுத்த ஹோல்டர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றையப் போட்டிகள்

ஐபிஎல் தொடரில் இன்று (செப். 26) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடரின் 38ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மதியம் 3.30 மணிக்கு மோதுகின்றன.

அதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: IPL 2021: ஹைதராபாத் பந்துவீச்சு; பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள்

Last Updated :Sep 26, 2021, 6:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.