ETV Bharat / sports

GT Vs MI : மும்பைக்கு போதாத காலம்! சென்னைக்கு டஃப் கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ்!

author img

By

Published : Apr 26, 2023, 6:42 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ipl 2023
ipl 2023

அகமதாபாத் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியின் இன்னிங்சை விருத்தமான் சஹாவும், சுப்மான் கில்லும் தொடங்கினர். குஜராத் அணிக்கு தொடக்கம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. விருதமான் சஹா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. தன் பங்குக்கு 13 ரன்களும் அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 19 ரன்கள் மட்டும் எடுத்து வெறியேறினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் அரை சதம் அடித்தார்.

56 ரன்கள் எடுத்த சுப்மான் கில் குமார் கார்த்திகேயா பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் (46 ரன்), அபினவ் மனோகர் (42 ரன்) ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.

ராகுல் திவேதியா 20 ரன்களுடனும், ரஷித் கான் 2 ரன்களுடனும் களத்தில் நின்றனர். மும்பை அணியில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், அர்ஜூன் தெண்டுல்கர், பெஹரண்ட்ராப், குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 208 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

பெரிய ஸ்கோரை சேஸிங் செய்ய வேண்டும் என்ற அச்சம் மும்பை வீரர்களின் மனதில் தென்பட்டதோ என்னவோ சொல்லிக் கொள்ளும் அளவில் எந்த வீரரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 13 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு சரியான தொடக்கத்தை கொடுக்க தவறினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் 23 ரன்கள் மட்டும் எடுத்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். திலக் வர்மா 2 ரன், டிம் டேவிட் டக் அவுட் என மும்பை வீரர்கள் வருவதும் போவதுவாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். கேமரூர் கிரீன் 33 ரன் மற்றும் நேஹல் வதேரா (40 ரன்) ஆகியோர் மட்டும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடினர்.

இருப்பினும் அணியின் வெற்றிக்கு அவர்களின் ஸ்கோர் போதவில்லை என்றே கூறலாம். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் நூர் அகமது 3 விக்கெடும், ரஷித் கான், மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் வீழத்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி குஜராத் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நீடிக்கிறது. 7 ஆட்டங்களில் 3 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் மும்பை அணி உள்ளது.

இதையும் படிங்க : DC VS SRH : டெல்லி அணி 2-வது வெற்றி! கடைசி இடத்தை தக்கவைக்க கடும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.