ETV Bharat / sports

CSK Vs KKR : கொல்கத்தாவை ஊதித் தள்ளிய சென்னை! சொந்த ஊரில் சின்ராசுக்கு ஏற்பட்ட சோகம்!

author img

By

Published : Apr 24, 2023, 6:46 AM IST

IPL 2023
IPL 2023

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு இரண்டு போட்டிகள் நடைபெற்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவென் கான்வாய் ஆகியோர் களம் இறங்கினர். விறுவிறுப்பாக ஆடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர்.

3 சிக்சர், 2 பவுண்டரி என 35 ரன்களுடன் களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் சுயேஷ் சர்மா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானே, ஆரம்பத்தில் சிறுது தடுமாறினாலும் களத்தில் காலூன்றிய பின் அடித்து ஆடத் தொடங்கினர். அவருக்கு உறுதுணையாக இருந்து அரை சதத்தை தாண்டி விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் டிவென் கான்வாய் (56 ரன்) சக்கரவர்த்தி பந்துவீச்சில் கேட்சாகி அவுட்டானார்.

கொல்கத்தா மண்ணில் சென்னை பட்டையை கிளப்பினர் எனக் கூறுவதற்கு உதாரணமாக அமைவது போல் அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த் அடித்து ஆடத் தொடங்கினார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பத் தவறாததால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.

ஷிவம் துபே, 5 சிக்சர், 2 பவுண்டரி என விளாசி தன் பங்குக்கு அரை சதம் அடித்த கையோடு வெளியேறினார். இறுதியில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக இரு சிக்சர்களை பறக்க விட சென்னை அணியின் ஸ்கோர் இமாலயத்தை தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 235 ரன்கள் எடுத்தது.

ரஹானே 71 ரன்களுடனும், டோனி 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். கொல்கத்தா அணிக்கு அதன் சொந்த ஊரிலேயே சென்னை வீரர்கள் தண்ணி காட்டி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு, சென்னை அணியின் ஸ்கோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

236 என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி வீரர்கள் களமிறங்கினர். அதிரடி ஆட்டத்திற்காக தொடக்கத்தில் இறக்கி விடப்பட்ட சுனில் நரேன் தான் சந்தித்த 3வது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து டக் அவுட்டாகினார். மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேசன் ஜெகதீசனும் 1 ரன்னில் நடையைக் கட்டினார்.

இமாலய இலக்கு என்ற அச்சம் கொல்கத்தா வீரர்களின் மனதில் உதித்ததோ அன்றோ அந்த அணி வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் 20 ரன், கேப்டன் நிதிஷ் ரானா 27 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர். இதனிடையே களமிறங்க அதிரடி ஆட்டக்காரர்கள் ரிங்கு சிங் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் ஓரளவு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி படுதோல்வி அடையுமோ என்ற அச்சத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

விறுவிறுபாக ஆடிய ஜேசன் ராய் தலா 5 பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி தன் பங்குக்கு 61 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் வெற்றிக்காக ரிங்கு சிங் போராட மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ஆந்திரே ரஸ்செல் 9 ரன், டேவிட் விஸ்ஸி 1 ரன், உமேஷ் யாதவ் 4 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தேக்‌ஷேனா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆகாஷ் சிங், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மத்தீஷ பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

71 ரன்கள் விளாசிய ரஹானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் முலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி அதில் 5 வெற்றி 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க : RCB vs RR: சொந்த மண்ணில் 'கெத்து' காட்டிய பெங்களூரு: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.