ETV Bharat / sports

DC vs SRH: வெற்றிப் பாதையில் பயணிக்குமா டெல்லி? சமாளிக்குமா சன்ரைசர்ஸ்?

author img

By

Published : Apr 24, 2023, 2:23 PM IST

இன்றைய ஐபிஎல்
Today IPL

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சொந்த மண்ணில் களம் இறங்கும் ஹைதராபாத் அணி வெற்றி பெறுமா? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அணிகளுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 9வது இடத்திலும், டெல்லி கேபிட்டல்ஸ் 10வது இடத்திலும் உள்ளன.

டெல்லி அணி எப்படி?: நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு வெற்றி மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக கொல்கத்தா அணியுடன் மோதிய ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர், அக்சர் படேலை தவிர பிற வீரர்கள், எதிரணி வீரர்களிடம் சரணடைந்து விடுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா ஃபார்மை இழந்து தவிக்கிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 47 ரன்கள் எடுத்துள்ளார். 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள மிட்செல் மார்ஷ் 4 ரன்கள், 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள பாவெல் 7 ரன்கள் எடுத்து ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளனர். 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோசோவ் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஒட்டுமொத்த அணியும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே, நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சை பொறுத்தவரை சீனியர் வீரர் இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் நம்பிக்கை அளிக்கின்றனர். பவுலர்கள் சரியான பங்களிப்பை கொடுத்தால், சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

தடுமாறும் ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் தொடக்க ஜோடி நிலைத்து நின்று ரன் சேர்க்க தவறுகின்றனர். 5 ஆட்டங்களில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் களம் இறங்கிய நிலையில், எதிர்பார்த்த அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. இதனால், கடந்த ஆட்டத்தில் ஹாரி ப்ரூக்குடன், அபிஷேக் சர்மா களம் இறங்கினார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ப்ரூக், அதன்பிறகு பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.

கேப்டன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளாசென் ஆகியோர் முழு திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தடுமாறுகிறார். 4 போட்டிகளில் அவர் 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய ஆட்டம் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கு முக்கியமானது என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்டம் எங்கே?: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம், இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் - கேபிட்டல்ஸ் அணிகள் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 11, டெல்லி கேபிட்டல்ஸ் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

சன்ரைசர்ஸ் உத்தேச அணி: ஹாரி ப்ரூக், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிளாசென், ஜான்சென், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்/மயங்க் தாகர்.

டெல்லி உத்தேச அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ப்ரித்வி ஷா/சர்பிராஸ் கான், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், குல்தீப் யாதவ், ஆன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.