ETV Bharat / sports

DC vs KKR: வெற்றிக் கணக்கை தொடங்குமா டெல்லி? மீண்டு வருவது எப்போது?

author img

By

Published : Apr 20, 2023, 2:15 PM IST

Today IPL MATCH
இன்றைய ஐபிஎல் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, அனைத்திலும் தோல்வியைடந்துள்ள நிலையில், மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெல்லி அணியின் பலவீனம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. லக்னோ, குஜராத், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளுடன் மோதியுள்ள டெல்லி அணி, வெற்றிக் கணக்கை தொடங்காமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தேறுமா டெல்லி?: டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் வார்னர் மட்டுமே ஃபார்மில் உள்ளார். நடப்பு சீசனில் 3 அரைசதங்களுடன் அவர் 228 ரன்களை குவித்துள்ளார். அதன்பிறகு அந்த அணியில் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நம்பிக்கை அளிக்கிறார். 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் 129 ரன்களை சேர்த்துள்ளார். ஆனால் பிற வீரர்கள், எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

தொடக்க வீரர் ப்ரித்வி ஷா, ஃபார்மை இழந்து தடுமாறுகிறார். 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 34 ரன்களை எடுத்துள்ளார். ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கலீல் அகமது ஏமாற்றம் அளிக்கிறார். குல்தீப் யாதவ், நார்ட்ஜே, முஸ்டபிசுர் ரகுமான் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய ஆட்டம் டெல்லியில் நடைபெறுவது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்க முடியும்.

மிரட்டும் பேட்டிங்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. பெங்களூரு, குஜராத் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ள அந்த அணி பஞ்சாப், ஹைதராபாத், மும்பை ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ஜேசன் ராய், ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அதேநேரம் பந்துவீச்சில் கொல்கத்தா அணி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் முழுத் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஃபெர்குசன், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா சிறப்பாக பந்து வீசினால் டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

போட்டி எங்கே?: டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டம், டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேருக்கு நேர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி - கொல்கத்தா அணிகள் 30 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் டெல்லி 14, கொல்கத்தா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

டெல்லி உத்தேச அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், அபிஷேக் பொரேல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஆன்ரிச் நார்ட்ஜே/முஸ்தஃபிசுர் ரகுமான்.

கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய்/ரஹ்மனுல்லா குர்பாஸ், ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், ஃபெர்குசன், வருண் சக்ரவர்த்தி/சுயாஷ் சர்மா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.