ETV Bharat / sports

ஜெய்ஸ்வால், துபே அசத்தல் பேட்டிங்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 10:33 PM IST

india won by 6 wickets and won the t20 series against Afghanistan
இந்திய அணி வெற்றி

IND VS AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் போட்டி நடைபெற்று அதில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று (ஜன.14) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் முறையே 48, 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து களம் கண்ட வீரர்களில் குல்பாடின் நைப்பை தவிர்த்து மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அஸ்மத்துல்லா உமர்சாய் 2, முகமது நபி 14, நஜிபுல்லா சத்ரன் 23, கரீம் ஜனத் 20, முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாடின் நைப் 35 பந்துகளில் 5 ஃபோர்கள், 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ரவி பிஸ்னொய் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. தொடக்க வீரரான ரோகித் சர்மா கோல்டன் டக் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி கூட்டணி அணிக்கு ரன்களை சேர்த்தது. அணி 62 ரன்கள் எடுத்த போது கோலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் சிவம் துபே கைகோர்க்க இந்திய அணி வெற்றிப் பாதையை நோக்கிச் சென்றது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

பின்னர் ஜெய்ஸ்வால் 68 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக கரீம் ஜனத் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: மார்ச்.15க்குள் கெடு! மாலத்தீவு அரசின் அடுத்த நடவடிக்கை! எப்படி திருப்பி கொடுக்கும் இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.