ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசி., நிதான ஆட்டம்

author img

By

Published : Jun 21, 2021, 6:12 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான நிலையில் உள்ளது.

India Vs New Zealand
India Vs New Zealand

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய நாள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 3ஆம் நாளில் ரன் ஏதும் சேர்க்காமல் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர், பந்த், ரஹானே, அஸ்வின் என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க உணவு இடைவெளியின்போது இந்தியா 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது செஷன்

இரண்டாவது செஷனிலும் இந்திய வீரர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 92.1 ஓவரில் இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் இவரின் ஐந்தாவது ஐந்து-விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை மிகப் பொறுமையாகவே விளையாடியது. தொடக்க வீரர்களான லேதம் - கான்வே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்தான் இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை தேடித்தந்தார். 34.2 ஓவரில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

தொடக்க வீரர் டாம் லேதம் அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 30 (104) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடரின் முதல் அரைசதம்

அடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். இந்த ஜோடியும் பொறுமையாக விளையாடிவந்தது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கான்வே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் அரைசதத்தை அடித்தார். நியூசிலாந்து அணியின் இந்த சந்தோஷம் சிறிதுநேரமே நீடித்தது.

அரைசதத்தை கடந்த சிறிது நேரத்திலேயே கான்வே வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் 54 (153) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ராஸ் டெய்லர் களமிங்கிய நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்குவந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் எட்டு விக்கெட் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்திய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: யார் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்: சச்சினா சங்கக்காராவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.