ETV Bharat / sports

Ind Vs Afg 2nd T20I : வரலாற்று சாதனையை தொடருமா இந்தியா? ஆப்கான் புது வரலாறு படைக்குமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 1:40 PM IST

India Vs Afghanistan 2nd T20I Cricket
India Vs Afghanistan 2nd T20I Cricket

ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்தூர் : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 11ஆம் தேதி பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று (ஜன. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அதேநேரம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றிக்காக ஆப்கான் வீரர்கள் போராடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிகிறது. இதற்கான விமானம் மூலம் இந்தூர் வந்த அவர் இந்திய அணியுடன் இணைந்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது. ஏறத்தாழ 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்க்ள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மற்றபடி இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு நல்ல நிலையில் உள்ளது. ஆப்கான் வீரர்களுக்கு இந்திய அணி கடும் சவால் அளித்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கான் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடிக்காமல் போனது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக காணப்படுகிறது.

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த ஆட்டத்திலும் அவரது ஈடுபாடு இன்றியமையாததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்திய வீரர்கள் ஒருசேர ஜொலிக்கும் படத்தில் இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கானது என்பதில் துளியும் சந்தேகமில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியே கண்டது இல்லை. அந்த சாதனையை இந்த ஆட்டத்திலும் இந்திய அணி தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க : பாரத் ஜோடோ நியாய யாத்திரா : ராகுல் காந்தி எங்கெல்லாம் எவ்வளவு நாட்கள் பயணம்? முழு தகவல் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.