ETV Bharat / sports

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 கிரிக்கெட் நடைபெறுமா? திடீர் சிக்கல்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 3:17 PM IST

Ind Vs Afg 1st T20 Cricket
Ind Vs Afg 1st T20 Cricket

பஞ்சாப்பில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ள நிலையில், நாளை (ஜன. 11) இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், அது குறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்து உள்ளது.

மொஹாலி : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலியில் நடைபெறுகிறது.

ஏறத்தாழ 14 மாத இடைவெளிக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பி உள்ளதால் ஆட்டத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் பஞ்சாப்பில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழும்பி உள்ளது.

குளிர்காலம் காரணமாக பஞ்சாப்பில் கடும் குளிர் நிலவுகிறது. அத்துடன் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் சண்டிகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. இதனால் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்தரா மைதானத்தில் திட்டமிடப்படி முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம், போட்டி நடைபெறும் மைதானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் திட்டமிட்டபடி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்து உள்ளார்.

மைதானத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போதுமான அளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், வானிலை மாற்றத்தால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் களம் காணுகிறது.

அதேபோல் இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாகை சூடி நாட்டுக்கு கோப்பையுடன் திரும்ப திட்டமிட்டு உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது. ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை தவறவிடுவார் எனக் கூறப்படுகிறது. பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மைதானத்தில் டாஸ் வெல்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஜொலிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.