ETV Bharat / sports

வங்கதேசத்தை விருட்சமாக்கப்போகும் ஷகிப் என்னும் விதை!

author img

By

Published : Jul 17, 2019, 10:26 PM IST

ஷாகிப்

விதையை எப்போதும் இந்த உலகம் கண்டுகொள்ளாதுதான். ஆனால், அந்த விதை விருட்சமாக வளர்ந்த பிறகு அந்த விதையே கண்களிலும், எண்ணங்களிலும் வந்து செல்லும். ஏனெனில் இதுவரையில் இயற்கையின் விதி அதுதான். இங்கே விதை போட்டிருப்பவர் ஷகிப் அல் ஹசன்

உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியின்போது தொடர்நாயகன் விருது வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மற்றொரு வீரர்தான் அந்த விருதை பெறுவார் என ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வீரர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன். அவர் இந்தத் தொடரில் 8 போட்டிகளில் ஆடி 606 ரன்கள் குவித்தார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் 11 விக்கெட்டுகளை எடுத்தார். கிட்டத்தட்ட உலகக்கோப்பையில் ஆடிய வீரர்களிலேயே அதிக ஆவரேஜ் வைத்துள்ள வீரர்களில் சாகிப்தான் முதலிடம். ஆனால் தொடர் நாயகன் விருது பெற்ற வில்லியம்சன் 10 போட்டிகளில் ஆடி 578 ரன்கள் எடுத்திருந்தார். ஐசிசி கண்களுக்கு ஷகிப்பின் முகம் 3டி கண்ணாடி அணிந்தாலும் தெரியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பினர்.

ஷாகிப்
வங்கதேச ரசிகர்கள்

உலகக்கோப்பை போன்ற தொடர்களில் தொடர் நாயகன் விருதினை வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் பெற்றால், அதன் வீரியத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதிலும் வங்கதேசத்தில் ஒரே நாளில் பட்டி தொட்டியெங்கும் ஹீரோவாகிவிடுவார். வங்கதேச ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பதையெல்லாம் கடந்து, வங்கதேசத்தில் கிரிக்கெட் கனவோடு வலம் வரும் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைக்கும். இங்கே அதுதான் மறுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பார்க்கும் பார்வையாளர்களிடம் 10 வங்கதேச வீரர்களின் பெயரை சொல்ல சொன்னால் அதில் முதல் பெயராக வருவது ஷகிப்பின் பெயராகத்தான் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவரது பெயரை அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது. எல்லா அணிகளிலும் ஆல் - ரவுண்டர் இருக்கிறார்கள். ஆனால் ஆல்-ரவுண்டர் என்னும் சொல்லுக்கு ஷகிப்தான் மிகச்சிறந்த உதாரணமாக சமகாலத்தில் திகழ்ந்து வருகிறார். இவரால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும், பந்துவீச்சிலும் ஆக்ரோஷமாக செயல்பட முடியும்.

ஷாகிப்
ஷாகிப்

வங்கதேச கிரிக்கெட் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இருந்துதான். 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சில போட்டிகளில் பெரிய அணிகளை 'அப்செட்' செய்யும் அணியாகதான் ரசிகர்கள் வங்கதேசத்தை பார்த்தனர். அதிர்ஷ்டத்தால் 'அப்செட்' செய்வார்கள் என வீரர்களின் திறமைகளையும், முயற்சிகளையும் ரசிகர்கள் ஒற்றை வார்த்தையில் எளிதாக கடந்துவிட்டனர்.

அங்கிருந்து 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை ’அப்செட்’ செய்தபோது வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திறமையானவர்கள்தான் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் 'அப்செட்' என்ற வார்த்தைதான் திரும்பவும் உச்சரிக்கப்பட்டது. தங்களது இருப்பைக் காட்டிகொள்வதற்காகவே ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான், கென்யா ஆகிய அணிகளை வீழ்த்தினர் வங்கதேசத்தினர். ஆனால் இது அந்நாட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவில்லை. ஏனென்றால் அங்கே நட்சத்திரங்கள் வீரர்கள் இல்லை. இந்தியாவுக்கு சச்சின், ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், இலங்கை அணிக்கு ஜெயவர்தனே போன்ற வீரர்களைப் போன்று வங்கதேச அணிக்கு ஒரு வீரர் கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமாகவே பார்க்கப்பட்டது.

ஷாகிப்
ஷாகிப்

ஒரு நாடு என்றால் விளையாட்டில் தனித்துவமாக அடையாளங்கள் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு கிரிக்கெட், ஹாக்கி. பாகிஸ்தானிற்கு கிரிக்கெட், ஹாக்கி, இசை என பல அடையாளங்களை இரு நாடுகளும் வைத்திருக்கின்றன.

ஆனால் போராலும், இயற்கை பேரிடராலும் பாதிக்கப்பட்ட வங்கதேசத்திற்கு கிரிக்கெட்தான் கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. விளையாட்டு உணர்வு ஒரு மனிதனை சுதந்திரமாக செயல்பட வைக்கும். வாழ்வை வாழ ஒரு பிடிப்பைக் கொடுக்கும். அதற்காகத்தான் வங்கதேச ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள்.

ஐசிசியின் வளர்ச்சி அலுவலர் அமினுல் சொல்லிய வார்த்தைகள் இவை, ”வங்கதேசத்திற்கு சென்று கிரிக்கெட் ஆடுவதற்கு வருகிறீர்களா என 100 பேரிடம் கேட்டால், 99 பேர் வருகிறேன் என்றுதான் சொல்வார்கள். மீதியிருக்கும் ஒருவரும் சோம்பேறிதனத்தால் மட்டுமே வர முடியாது என்பார். அவரும் டிவியில் கிரிக்கெட்டை பார்க்கிறவராக இருப்பார். எனவே வங்கதேச மக்களுக்கு கிரிக்கெட் பிடித்திருக்கிறது”.

ஷாகிப்
வங்கதேச ரசிகர்கள்

எத்தனை தோல்விகள் வங்கதேச அணி அடைந்தாலும், மைதானம் முழுமையாக வங்கதேச அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள். தோல்வியின் சோகத்தால் ரசிகர்கள் கண்ணீர்விடுவார்கள் என்பது வங்கதேச கிரிக்கெட் அணியைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

வங்கதேச அணி தொடர்ந்து 40 போட்டிகளில் தோல்வியடைந்தபோதிலும், 41ஆவது போட்டிக்கு மைதானம் முழுக்க ரசிகர்கள் இருந்தது எல்லாம் அந்நாட்டு கிரிக்கெட்டின் மெய் சிலிர்க்கும் மொமண்ட்ஸ்.

2015 வரையிலும் வங்கதேச அணியின் நிலைமை இதுதான். ஆனால் அந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவினை தகர்த்ததன் மூலம் வங்கதேச அணி சர்வதேச அணிகளுக்கு ஈடுகொடுத்து சண்டை செய்ய முடியும் என நிரூபிக்கத் தொடங்கியது. அந்த உலகக்கோப்பையில் மஹமதுல்லா சதங்கள் விளாசி புதிய உத்வேகத்தைக் கொடுத்தார். அதனையடுத்து வங்கதேச அணி கால் பதித்த இடமெல்லாம் சண்டை செய்யாமல் திரும்பியதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஷகிப் அல் ஹசன். எந்த அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லை என கூறினார்களோ அதே அணியில் நட்சத்திர வீரர்களாக இளம் பட்டாளத்தினர் அணி வகுத்தனர்.

ஷாகிப்
ஷகிப்

ஷகிப், ரஹீம், முஸ்தாஃபிகுர் ரஹ்மான், சபீர் ரஹ்மான், தமீம் இக்பால் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட மோர்டசா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதன்பின், ஆசியக் கோப்பை, நிதாஹஸ் கோப்பை, உள்நாட்டுத் தொடர் என ஆசிய அணிகளுக்குள் தவிர்க்க முடியாத அணியாக வங்கதேசம் படையெடுத்தது. இதனிடையே ஷகிப் தனது பேட்டிங்கால் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம், பந்துவீச்சில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என தனது சாதனைகளையும் மெருகேற்றிக் கொண்டே சென்றார்.

ஷாகிப்
ஷகிப்

ஒரு கட்டத்தில் ஷகிப்பின் இருப்பு, வங்கதேச அணி மீது மற்ற அணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட தொடர்களில் வங்கதேச அணி வீரர்கள் கலந்துகொண்டு ஆடியது மேலும் அந்நாட்டு கிரிக்கெட் முன்னேற உதவியது. எந்த கிரிக்கெட் ஃபேண்டசி தொடர்களை எடுத்தாலும் ஷகிப்பின் பெயர் தவிர்க்க முடியாததாக மாறியது. இவரது பந்துகள் பெரிதாக ஸ்பின் ஆகாது என்றாலும் இவரது அக்யூரசி (accuracy) எதிரணிகளை திணறடித்தது. அதேபோல் மிடில் ஓவர்களில் இவர் ஆடும் ஆட்டம் அணிக்கு மிகப்பெரும் பலத்தைக் கொடுத்தது.

ஷாகிப்
ஷகிப் அல் ஹசன்

பின்னர் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு வங்கதேச அணி இங்கிலாந்து அணிக்கு பயணப்பட்டது. 2007ஐ போலவே தென்னாப்பிரிக்கவை முதல் போட்டியிலேயே வங்கதேச அணி வீழ்த்த சர்வதேச ரசிகர்கள் கண்கள் வங்கதேச அணி மீது படரத் தொடங்கியது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தும் சில தவறுகளால் தோல்வியடைந்தது. பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பெரிய டார்கெட் நிர்ணயிக்கப்பட்டும், அசராமல் ஷகிப் நின்று மாயாஜாலம் செய்ததெல்லாம் உலகக்கோப்பையின் பொக்கிஷங்கள்.

ஷாகிப்
வங்கதேச ஹீரோ

இதை எல்லாம் கடந்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த இலக்கை விரட்டியபோது, இந்திய ரசிகர்கள் அனைவரும் வங்கதேச அணி வெற்றிபெற வேண்டும் என நினைத்ததுதான் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றி. ஒருவனின் போராட்டத்தைப் பார்த்து அந்த அணி வெற்றிபெற வேண்டும் என அனைவரும் நினைப்பது வங்கதேச கிரிக்கெட் வளர்ச்சியைக் காட்டுகிறது.

இந்த உலகக்கோப்பைத் தொடர்களில் மூன்றாவது வீரராக களமிறங்கியவர்களான கோலி, வில்லியம்சன், ஜோ ரூட், கவாஜா என சிறந்த வீரர்கள் இருந்தும் வங்கதேசத்திற்காக ஆடிய ஷகிப் அல் ஹசன்தான் 8 போட்டிகளில் 600 ரன்களை கடந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 விக்கெட்டுகள். எந்த ஒரு வீரரும் படைக்காத சாதனையை ஷகிப் படைத்துள்ளார். ஐசிசியின் கண்கள் சிறிய அணிகள் மீது பட தவறினாலும், நிச்சயம் வங்கதேசம் வளரும்.

ஷாகிப்
ஷாகிப்

உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வென்ற அணிகளான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளைக் கடந்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது வங்கதேசம். இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அணியாக வலம் வரவுள்ளதற்கான அடையாளங்களை இந்த உலகக்கோப்பையில் அந்த அணி ஆழமாக பதித்து சென்றிருக்கிறது. அந்த தடங்களுக்கு விதை போட்டவர் ஷகிப் அல் ஹசன்... விதையை எப்போதும் இந்த உலகம் கண்டுகொள்ளாதுதான். ஆனால், அந்த விதை விருட்சமாக வளர்ந்த பிறகு அந்த விதையே கண்களிலும், எண்ணங்களிலும் வந்து செல்லும். ஏனெனில் இதுவரையில் இயற்கையின் விதி அதுதான்....!

Intro:Body:

sakib ul hasan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.