ETV Bharat / sports

சேலத்திலிருந்து சிட்னிவரை பறக்கிறது நூலில்லாத பட்டம்

author img

By

Published : Dec 5, 2020, 9:19 PM IST

Updated : Dec 5, 2020, 10:53 PM IST

தமிழ்நாட்டிலிருந்து எத்தனையோ பேர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத கொண்டாட்டம் ஏன் நடராஜனுக்கு இருக்கிறது. ஏனென்றால் நடராஜன் ஒரு ஊர்க்குருவி. அந்த ஊர்க்குருவிகளுக்கு பிசிசிஐயின் கதவு இதற்கு முன் திறந்ததே இல்லை. அந்தக் கதவை திறந்தது நடராஜன்.

Yorker king  Natrajan travel from Salem to Sydney
Yorker king Natrajan travel from Salem to Sydney

கிரிக்கெட் விளையாட்டின் டிரெண்டிங் என்றால் இப்போது நடராஜன். யார் இந்த நடராஜன், ஏன் எல்லோரும் அவரை கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வி சிலரது மனதில் எழும். அதற்கெல்லாம் ஒரே விடை ஐபிஎல் 2020. கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிதும் பேசப்பட்ட நபர் நடராஜன். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்தவராக மாறியுள்ளார் நடராஜன்.

நடராஜன் தங்கராசு
நடராஜன் தங்கராசு

ஐபிஎல் தொடரில் இவரது யார்க்கர் திறனை கண்ட இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவினர், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் கூடுதல் பந்துவீச்சாளராகவே அவரை முதலில் தேர்வு செய்தனர். பின்னர் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் காயம் காரணமாக நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய நடராஜன், தனது அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது கால்தடத்தைப் பதித்தார். டி20 தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய வீரர்களை கிறங்கடித்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் அவர் வீசிய கடைசி ஓவரில் அனைத்து பந்துகளையும் யார்க்கராக வீசியது சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களையும் கவர்ந்தது.

‘யார்க்கர் கிங்’ நடராஜன்
‘யார்க்கர் கிங்’ நடராஜன்

நடராஜனுக்கு யார்க்கர் பந்துகள் மட்டும்தான் வீச தெரியும் என பேசியவர்களுக்கு, மேக்ஸ்வெல்லுக்கு அவர் வீசிய லைன் அண்ட் லெங்த் பந்து மூலம் பதில் சொன்னார் நடராஜன். ஒரு விளையாட்டு வீரனுக்கு விளையாடும் திறன் அடிப்படை தகுதி என்றால் தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்ள முயல்வது முதல் தகுதி. அது நடராஜனுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் இந்த மாடர்ன் டே கிரிக்கெட் உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவரான கோலியின் வாயால் பாராட்டு பெற்றிருக்கிறார்.

ஒரு நாட்டுடைய ஒரு மாநிலத்தின் தலைநகரிலிருந்து எங்கோ இருக்கும் ஒரு புழுதி கிராமத்திலிருந்து கிளம்பி ஒரு நாட்டின் தலைநகரில் தன்னை நிரூபித்திருக்கிறார் நடராஜன். தமிழ்நாட்டிலிருந்து எத்தனையோ பேர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத கொண்டாட்டம் ஏன் நடராஜனுக்கு இருக்கிறது. ஏனென்றால் நடராஜன் ஒரு ஊர்க்குருவி. அந்த ஊர்க்குருவிகளுக்கு பிசிசிஐயின் கதவு இதற்கு முன் திறந்ததே இல்லை. அந்தக் கதவை திறந்தது நடராஜன்.

சேலாம் டூ சிட்னி சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்
சேலம் டூ சிட்னி சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்

நூலில்லாமல் ஒரு பட்டம் பறப்பது இயலாத ஒன்று. அதிலும் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பட்டம் நூல் இல்லாமல் பறப்பதெல்லாம் முடியவே முடியாதது. ஆனால் இப்போது நடராஜன் எனும் பட்டம் நூலில்லாமல் பறந்துகொண்டிருக்கிறது. அந்த நூலில்லா பட்டம் மேலும் பறக்க வாழ்த்துகிறது ஈடிவி பாரத்..

இதையும் படிங்க: AUS vs IND: தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்குமா இந்தியா?

Last Updated : Dec 5, 2020, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.