ETV Bharat / sports

ஒன்பது விரல்களுடன் விளையாடியது பெருமையாக இருக்கிறது - பார்த்திவ் படேல்

author img

By

Published : Apr 28, 2020, 12:28 PM IST

Feels good to represent India as 'keeper with nine fingers: Parthiv
Feels good to represent India as 'keeper with nine fingers: Parthiv

ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்காக விளையாடியது பெருமையாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

தாதா கங்குலியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், பார்த்திவ் படேலும் ஒருவர். விக்கெட் கீப்பரான இவர் தனது 17 வயதில் 2002இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையடுத்து, 2003 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் ராகுல் டிராவிட் இருந்ததால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது பின்நாட்களில் (2005) தோனியின் வருகையால் குறைந்தது.

இருப்பினும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிவந்ததால் இவருக்கு 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 2018-19 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் இருந்ததால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

இதனிடையே, ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத், மும்பை அணிகளுக்காக விளையாடிவந்த இவர் தற்போது பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ளார்.

குஜாரத்தைச் சேர்ந்த இவர் தனது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணிக்கு 2016-17 சீசனில் ரஞ்சிக் கோப்பை வென்றுத் தந்துள்ளார்.

இந்நிலையில், தான் இத்தனையாண்டுகளாக ஒன்பது விரல்களுடன் கிரிக்கெட் விளையாடிவந்த ரகசியத்தை பார்த்திவ் படேல் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு ஆறு வயதாக இருந்தபோது எனது இடது கை சுண்டு விரல் வீட்டின் கதவில் சிக்கி தூண்டானது. சுண்டு விரல் இல்லாததால் விக்கெட் கீப்பிங் செய்யும் போது சற்று கடினமாகவே இருந்தது. சுண்டு விரல் பகுதியில் மட்டும் கையில் கிளவுஸ் நிற்காது. அதனால், எனது விக்கெட் கீப்பிங் கிளவுஸில் டேப் ஒட்டிக்கொண்டுதான் விளையாடுவேன். ஒருவேளை எனக்கு 10 விரல்களும் இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது நான் 9 விரல்களுடன் இந்திய அணிக்காக விளையாடியதை நினைத்து பார்க்கும் போது பெருமையாக உள்ளது"என்றார்.

தற்போது 35 வயதான இவர் இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் 934 ரன்களும், 38 ஒருநாள் போட்டிகளில் 736 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் இடத்தை நிரப்புவது சவால்: ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.