ETV Bharat / sitara

'என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை' - கே.ஜே. யேசுதாஸ்!

author img

By

Published : Sep 26, 2020, 4:16 PM IST

கே.ஜே. யேசுதாஸ்
கே.ஜே. யேசுதாஸ்

சென்னை: என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (செப்.25) பிற்பகல் சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர்.

பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று அழைக்கும்போது ஒரு அம்மா வயிற்றில் பிறக்கவில்லை என்றால்கூட, பிறந்தவர்போல பழகியவர்.

முன் ஜென்மத்தில் நானும், எஸ்.பி.பி.யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார். ’சங்கராபரணம்’ என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாகப் பாடியிருப்பார்.

அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை எனக் கூறமாட்டார்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சிகரம் படத்தில் பாடிய 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' என்ற பாடல் பாலு எனக்குப் பரிசாகப் பாடினேன் என்று கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார்.

நம்முடன் இருக்கும் அனைவரையும் அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார். பாரிசில் நாங்கள் தங்கியபோது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்போது பாலு ரூம் சர்வீஸ் எனக் குரல் மாற்றி கிண்டல்செய்தார். பின்பு அனைவருக்கும் அவரே சமைத்துப் பகிர்ந்தார்.

அவ்வளவு பசியில் அந்தச் சாப்பாடு ருசியாக இருந்தது. எல்லோரும் வயிறார சாப்பிட்டோம். நாங்கள் கடைசியாகப் பாடியது சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன்.

இந்தக் கரோனா தொற்றால் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. என்னால் வெளிநாட்டிலிருந்து இங்கே வர முடியவில்லை. என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை என்பது ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், மறுபக்கம் அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும் - நயன்தாரா உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.