ETV Bharat / sitara

’கரோனா, கொரில்லா யுத்தம் செய்கிறது’-கவிப்பேரரசு வைரமுத்து

author img

By

Published : Apr 4, 2020, 4:56 PM IST

Updated : Apr 4, 2020, 8:06 PM IST

கரோனா வைரஸ் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி, வெளியிட்டுள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதை விடுமுறை என்று எடுத்துகொண்டு வெளியே ஊர் சுற்றுகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை முன்வைத்து கவிப்பேரரசு வைரமுத்து 'கரோனாவும், கொரில்லாவும்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • கொரோனா விடுமுறை
    கொண்டாட்டமல்ல;
    கிருமி ஞானம்.
    கன்னத்திலறைந்து
    காலம் சொல்லும் பாடம்!
  • ஊற்றிவைத்த கலத்தில்
    உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல்
    அடங்கிக் கிடப்போம்
    அரசாங்க கர்ப்பத்தில்
    இது கட்டாய சுகம்
    மற்றும் விடுதலைச் சிறை
  • மரணம் வாசலுக்கு வந்து
    அழைப்புமணி அடிக்கும் வரைக்கும்
    காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும்
  • ஓசைகளின் நுண்மம் புரிவதே
    இந்த ஊரடங்கில்தான்
    இந்தியப் பறவைகள் தத்தம் தாய்மொழியில் பேசுவது
    எத்துணை அழகு!
  • நீர்க்குழாயின் வடிசொட்டோசை
    நிசப்தத்தில் கல்லெறிவது
    என்னவொரு சங்கீதம்!
  • தரையில் விழுந்துடையும்
    குழந்தையின் சிரிப்பொலிதானே
    மாயமாளவ கெளளையின் மாதா பிதா!
  • மழையிற் சிறந்த மழை
    குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!
    இன்றுதான் நம்வீட்டில்
    ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்
  • வாங்குவாரற்று
    நமக்கே சொந்தமாகிப் போயின
    விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்
  • இதுவரை உறவுகளைத்தானே...
    இப்போதுதான்
    கைகளை மட்டுமே கழுவுகிறோம்
  • பாம்பு கடித்துச் செத்தவனைவிட
    செருப்புக் கடித்துச் செத்தவன் அதிகம்
    புலியடித்து இறந்தவனைவிட
    கிலியடித்து இறந்தவனதிகம்
    அச்சத்திலிருந்து
    அறிவு தயாரிப்போம்
    குப்பையிலிருந்து மின்சாரம்போல்.
  • கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா
    நாமும் சற்றே மறைந்து சமர்செய்வோம்
    மரண பயத்திலிருந்து
    மருந்து தயாரிப்போம்
  • உலகப் போரின் உயிர்களை விடவும்
    உழவர்குடியின் தற்கொலை விடவும்
    காதல் தோல்வியின் சாவினை விடவும்
    கொரோனா சாவு குறைவுதான்
  • நம்புங்கள்!
    விஞ்ஞானத்தின் சுட்டுவிரலுக்கும்
    கட்டை விரலுக்கும் மத்தியில்
    இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும்
    பூமியின் உயரங்களில்
    ஏறிநின்று கூவுவோம்
  • சூரியனில் இரையுண்டு
    பூமிவந்து முட்டையிடும்
    புதுயுகப் பறவைகள் நாமென்று
    எரிமலையில் உலைகூட்டி
    நட்சத்திரங்கள் பொங்கி உண்ணும்
    பூதங்கள் நாமென்று
  • ஊழி முடிவிலும்
    காற்று உறைந்துறு காலத்திலும்
    சுவாசிக்க மிச்சமிருக்கப் போவது
    கரப்பான் பூச்சியும்
    மனிதப் பூச்சியுமென்று.
  • மனிதர் மரிக்கலாம்
    மனிதகுலம் மரிக்காது
    பாதிக்கப்பட்டோர் யாரும்
    பாவிகள் அல்லர்
    எல்லா நோய்க்கும் முதல் மருந்து
    பாசாங்கில்லாத பாசம்தான்.
    மாண்டவரை விடுங்கள்
    பசித்தோர் முகம் பாருங்கள்

இதையும் படிங்க: 'விளக்க ஏற்ற சொல்லிருக்காரு, கொஞ்சம் பயமா இருக்கு'- ரத்னகுமார்

Last Updated :Apr 4, 2020, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.