ETV Bharat / sitara

தோழர் எஸ்.பி. ஜனநாதன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னத்தி ஏர்

author img

By

Published : Mar 15, 2021, 4:59 PM IST

Updated : Mar 15, 2021, 7:37 PM IST

asfd
dsfa

இவர் கையில் வைத்திருந்த காதல் கதை இயற்கையாய் ஒத்துவராத களம். ஆம், இரண்டு பேர் ஒரு பெண்ணை காதலித்தால் அந்த இரண்டு பேருமே மிக மிக நல்லவர்களாக இருந்தால் இயற்கையே யோசிக்கும் அல்லவா. இருந்தாலும் இயற்கையைக் கொடுத்தார் ஜனநாதன்.

"தே... புள்ள" இந்த வார்த்தையை கேட்டால் ஒட்டுமொத்த தமிழ் தெரிந்த மனிதர்களும் கொந்தளித்து அடங்குவார்கள். அந்த வார்த்தைக்குள் சிந்தனை சுருங்குவதால் வரும் கொந்தளிப்பு அது.

அதையும் கீறி மூளையை, பார்வையை மீறினால் அது அசிங்கப்பட வேண்டிய வார்த்தையில்லை உன்னை நீயே நினைத்து பெருமைப்பட வேண்டிய வார்த்தை ஏனெனில் அந்த வார்த்தைக்கு கோபப்படுபவனோ சோகப்படுபவனோ தான் இச்சாதி, இம்மொழி, இம்மதம், இவ்வினம் என அடையாளப்பட்டு அதற்குள் அடைபட்டு கொல்பவன்.

ஆனால் தே... புள்ளைக்கு அந்த அடைதல் இல்லை அவன் இச்சமூகம் கட்டமைத்திருக்கிற அடையாளத்துக்கு அப்பாற்பட்டு மனிதனாக வாழ்பவன் என இந்த கோலிவுட்டுக்கு ஒரே ஒருவர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் பெயர் எஸ்.பி. ஜனநாதன்.

துருவன்

ஜனநாதன் அடித்தட்டு மக்களின் நாதம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ரஞ்சித்தும், வடசென்னைக்கு வெற்றிமாறனும் இன்று அடையாளம் என்றால் இந்த அடையாளங்களை அடைகாத்து கலையில் முதலில் பொறித்தவர் ஜனநாதன்.

ஈ என்ற பெயரை வைத்துக்கொண்டு கமர்ஷியல் படம் எடுக்கவும் காசு உண்டு அதை திருப்பி கொடுக்கவும் ரசிகர்கள் உண்டு. ஆனால் அதே 'ஈ' பெயரை கொண்டு கம்யூனிஸ சித்தாந்தத்தையும், வடசென்னையின் முகத்தை மாற்றும் கதை அமைக்கும் கலையும் அதற்கு காசு போட வைக்கும் திறமையும் தோழர் ஜனநாதனுக்கு மட்டுமே உண்டு.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது ரணத்திலும் ரணமானது. அவர்கள் எங்கு சென்றாலும் எவ்வளவு உயரம் போனாலும் உளவியல் தாக்குதல்கள் அவர்கள் மீது வீரியமாக நடக்கும். அதனை மிக நேர்த்தியாக துருவனைக் கொண்டு பேராண்மை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தப் படம் வெளியானபோது பேராண்மை என்ற பெயரே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பேராண்மை

நாட்டுப் பற்று உணர்ச்சியை கொப்பளிக்க வைக்கும் படம்தான் என்றாலும் அதில் பழங்குடியின இளைஞன் அனுபவிக்கும் வேதனையை முகத்தில் அறைந்த படம். முக்கியமாக, வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது துருவன் பேசும் ஒவ்வொரு வசனமும் பொருளாதார படிநிலைகளை எளிய முறையில் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தது.

துருவன்
துருவன்

”இதெல்லாம் எனக்கு தெரியாமயா நடக்குது என்னைப் பொறுத்தவரைக்கும் டாய்லெட் ரூம்கூட எனக்கு கிளாஸ் ரூம்தான்”, “எங்க இனத்துல கற்பழிப்புங்ற வார்த்தையே கிடையாது”, “உழைக்கும் மக்களோட சர்வாதிகாரத்த நிச்சயமா இந்த உலகம் ஒருநாள் பார்க்கத்தான் போகுது” போன்ற வசனங்கள் காலங்கடந்து நிற்பவை.

சுற்றியிருக்கும் இளம்பெண்கள் துருவனை சீண்ட, அவனது உணர்ச்சிகளை தூண்ட முயன்றுகொண்டிருக்கும்போதெல்லாம் துருவனின் கைகளில் ஏதோ ஒரு புத்தகம் இருந்துகொண்டே இருக்கும். அடித்தட்டிலிருந்து வந்து வென்றவனின், பொதுவுடமை சித்தாந்தவாதியின் கவனத்தை யார் நினைத்தாலும் மடைமாற்ற முடியாது என்பதற்கான சான்று அது.

துருவன்

பேராண்மையைப் பொறுத்தவரை ஜனநாதன் அமைத்த க்ளைமேக்ஸை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அது அவர்களை சொல்லி குற்றமில்லை. ஏனெனில், கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு ஹீரோ என்பவன் மேல்தட்டாக இருப்பான் இல்லை சாகசம் செய்பவனாக இருப்பான். ஆனால் துருவன் அப்படியில்லையே.

அரசுப் பணியில் தன்னை துருவன் நிறுவிக்கொண்டாலும் அவனுடைய மேலதிகாரியால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுபவன், உபயோகப்படுத்தப்படுபவன். அவர்கள் எவ்வளவு உழைத்தாலும் ஏன் இந்த நாட்டை காப்பாற்றவே செய்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் மேலதிகாரியாலோ இல்லை மேல் சாதியினராலோ அபகரித்துக்கொள்ளப்படும் என்ற உண்மையான யதார்த்தத்தை க்ளைமேக்ஸாக வைத்தார்.

துருவன்

தன் உழைப்பால், சாதுரியத்தால், தைரியத்தால் நாட்டை காப்பாற்றிய துருவன் தனக்கான அங்கீகாரத்தை தனது மேலதிகாரி மேடையில் வாங்கிக்கொண்டிருக்க, துருவனோ மைதானத்தில் அடுத்த கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருப்பார்.

பணத்திற்காக எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் தான் கொண்ட கொள்கையில் வாழ்வதே இங்கு பெரிய சாதனையாக இருக்கிறது. அதிலும் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய வணிக தளத்தில் இருந்துகொண்டு எவ்வித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையின்படியே கலைப்படைப்பை தருவதெல்லாம் சர்வ சாதாரணமில்லை. அதுவும் கோலிவுட்டில் அப்படி இருந்தது நிச்சயம் பெரிய சாதனைதான்.

பொதுவுடமை சமுதாயம் அழிந்து போவதில்ல
பொதுவுடமை சமுதாயம் அழிந்து போவதில்ல

தூக்குக் கயிற்றில் தொங்கிய உயிர்களோ இல்லை தொங்கப்போகும் உயிர்களின் உளவியல் குறித்தோதான் இங்கு அதிகம் யோசிப்போம். தொங்குபவன் நிலைமை மட்டும் இங்கு கொடுமை இல்லை. தொங்க விடுபவனின் மனநிலையும் கொடுமைதான் என பேசுவதற்கும் இதே ஜனநாதன்தான் முதலில் கலையைத் திறந்தார்.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாமல் இருந்தாலும் அவரது திரைப்படங்களில் நிச்சயம் முக்கிய இடத்தைப் பெறும். அதில் அவர் பேசியிருப்பது யாரும் பேச யோசிக்கும் உளவியல்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை
புறம்போக்கு என்கிற பொதுவுடமை

எஸ்.பி. ஜனநாதன் சென்னையில் வளர்ந்து பட்டாணிக் கடை, சாராயக் கடை வைத்திருந்தாலும் அவரது மூளைக்குள் பொதுவுடமைச் சிந்தனையில் பொதுவுடமை சித்தாந்தம் ஓடியதற்கு அவருடன் பழகிய நபர்கள் முக்கிய காரணம். தனது திரைப்படங்களில் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பொதுவுடமை சித்தாந்தம் குறித்த குறியீட்டையோ, இல்லை கம்யூனிஸ தலைவர்கள் படத்தையோ இடம்பெற செய்துவிடுவார்.

எல்லாரும் காதல் பாடம் எடுத்திருக்கிறார்கள்தான். காதல் படங்களால்தான் கோடம்பாக்கம் ஓடிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் ஜனநாதனும் தனது காதல் கதையோடு முதல் சினிமா எடுப்பதற்காக நுழைந்தார் கோலிவுட்டுக்குள்.

ஆனால், இவர் கையில் வைத்திருந்த காதல் கதை இயற்கையாய் ஒத்துவராத களம். ஆம், இரண்டு பேர் ஒரு பெண்ணை காதலித்தால் அந்த இரண்டு பேருமே மிக மிக நல்லவர்களாக இருந்தால் இயற்கையே யோசிக்கும் அல்லவா. இருந்தாலும் இயற்கையைக் கொடுத்தார் ஜனநாதன்.

இயற்கையைப் பொறுத்தவரை யாரும் பதிவு செய்யப்படாத நிலத்தைப் பதிவு செய்தார் ஜனநாதன். அதுவரை கப்பல் என்றாலே டைட்டானிக்தான், கப்பல் நிற்கும் இடங்களிலெல்லாம், கப்பல்களிலெல்லாம் பணக்காரர்களோ, மேல் வர்க்கத்தினரோ மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த கோடம்பாக்க ரசிகனுக்கு, நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் கப்பலுக்கான, துறைமுகத்திற்கான நங்கூரம் என்று காட்சிப்படுத்தியவர் ஜனா சார்.

இயற்கை

ராமேஸ்வர பாலத்தில் போகும் ரயிலை காட்சிப்படுத்தியது, கப்பலுக்காக அந்தப் பாலம் திறப்பது, துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்தது என கோலிவுட் போட்டு வைத்திருந்த இயற்கையான விதிகளை மீறி புதுவித உணர்வுகளை இயற்கையாய் ரசிகர்களுக்கு கொடுத்தார் அவர். தஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையைப் படிக்காதவர்களுக்கு இந்தப் படம் மூலம் பேரனுபவத்தைத் தந்தவர் ஜனநாதன். 2003ஆம் ஆண்டு வெளியான படத்தை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் தனது வேலைகளை விட்டுவிட்டு அமர்ந்து பார்க்கும் கூட்டம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை

விவசாயிகளின் நிலைமை குறித்து படம் எடுப்பது ஒரு ஃபேஷனாகியிருக்கிறது தமிழ் சினிமாவில். ஆனால் எடுத்தவர்கள் அனைவரது படங்களிலும் கண்டிப்பாக ஒரு பிரசார நெடி வீசியிருக்கிறது. ஆனால் ஜனநாதன் கடைசியாக எடுத்திருக்கும் லாபம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது லாபம், கார்ப்பரேட் கலாசாரத்திற்கு நிச்சயம் மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது என்பது தெரிகிறது.

எளியவர்களுக்கான அரசியல் பேசுபவர் எப்போதும் எளிமையாக இருக்கவேண்டும். அந்த எளிமை இயல்பிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் எளியவர்களுக்கான அரசியலை எந்தவித பகட்டும் இல்லாமல் எளிமையாகப் பேச முடியும். ஜனநாதனின் எளிமை என்பது அவரது இயல்பு. டீக்கடையில் கையில் ஒரு டீ கிளாஸுடன் அவரால் திண்ணமான அரசியலைப் பேச முடியும்.

நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்
நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்

2003 to 2021 என 18 வருடங்கள் தமிழ் சினிமாவில் இயங்கியவர். எடுத்திருப்பதோ ஐந்து படங்கள்தான். அந்த ஐந்து படங்களும் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவை.

மூளையை வைத்துக்கொண்டு தனது நட்பு தளத்தை விரிவுப்படுத்தியவர் மூளை சாவால் மரணமடைந்திருக்கிறார். பா. இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் என தற்போதைய இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான முன்னத்தி ஏர் எஸ்.பி. ஜனநாதன். தோழருக்கு செவ்வணக்கம்.

Last Updated :Mar 15, 2021, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.