திருக்குறள் மட்டுமல்ல; எஸ்பிபி குரலும் மனிதர்களின் பொக்கிஷம்!

author img

By

Published : Sep 25, 2020, 3:44 PM IST

Updated : Sep 25, 2020, 4:19 PM IST

எஸ்பிபி

ஒரு பாடல் உடல் என்று எடுத்துக்கொண்டால் அதற்கு வரிகள் உடைகள். அந்த உடலை நடமாட வைப்பதற்கும், நடனமாட வைப்பதற்கும் உயிரான குரல் வேண்டும். அப்படிப்பட்ட குரலின் உயிர் குலையாமல் ஐந்து தலைமுறைகளுக்குப் பொருந்திப்போவது சாதாரண விஷயமில்லை. அதைத்தான் எஸ்பிபி செய்திருக்கிறார்.

ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட எஸ்.பி.பி. முதலில் பாடவந்தது தமிழில்! அப்போது அவருக்குத் தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. கூற, உடனடியாகத் தமிழை முறையாகக் கற்றுக்கொண்டார். அதன் பிறகு அடிமைப் பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஆயிரம் நிலவே வா" பாடலை முதல்முறையாகப் பாடினார்.

எந்த எஸ்.பி.பி.க்கு தமிழ் சரியாக வரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டதோ அதே எஸ்.பி.பி.யைப்போல் தமிழைச் சரியாக பாட இன்று ஆளில்லை என்று கூறலாம். அவரது குரலில் மனிதனின் ஒட்டுமொத்த குணாதிசயங்களும் ஒளிந்திருக்கும்.

ஆயிரம் நிலவே வா
ஆயிரம் நிலவே வா

எஸ்.பி.பி. பாடும்போது இசையமைப்பாளர் கொடுத்துவிட்டார் அதைப் பாடிவிட்டுப்போவோம் என்று இல்லாமல் பாடல்களின் இடையில் சிரிப்பது, சிணுங்குவது என்று தன்னால் முடிந்த அளவு அப்பாடலை குரல்கொண்டு மெருகேற்றியிருப்பார். சொல்லப்போனால், ஒரு ஆணின் சிரிப்பை, சிணுங்கலைப் பெண்கள் ரசிக்க தொடங்கியது எஸ்.பி.பி.யிடமிருந்துதான். அதனால் ஒட்டுமொத்த ஆண் இனமும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

தமிழில் உள்ள சிறப்பும், சிக்கலும் அதனை உச்சரிப்பது. உச்சரித்தல் என்பது ஒவ்வொரு மொழியைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடகரும் எச்சரிக்கையாய் இருக்கும் இடம். ஸ்ருதி தப்பலாம் ஆனால் மொழி தப்பினால் அப்பாடகர் ரசிகர்களிடம் மாட்டிக்கொள்வார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எந்த மொழியில் பாடியிருந்தாலும், அந்த மொழிகளின் உச்சரிப்பை மிக நேர்த்தியாகக் கையாண்டவர் எஸ்.பி.பி..

எஸ்பிபி குரலும் மனிதர்களின் பொக்கிஷம்
எஸ்பிபி குரலும் மனிதர்களின் பொக்கிஷம்

அவரும், இசைஞானியும் சேர்ந்துகொண்டு இந்தத் தமிழுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் செய்த தொண்டு காலத்திற்கும் மறக்கவோ மறுக்கவோ முடியாதது. இளையநிலா பொழிகிறதே என்ற பாடலில் இளையராஜாவும், வைரமுத்துவும் போட்டிப்போட்டிருப்பார்கள். ஆனால், அவர்களின் போட்டியை எஸ்.பி.பி. தனது குரலால் வென்றிருப்பார்.

இளையநிலா பொழிகிறதே
இளையநிலா பொழிகிறதே

பொதுவாக இளையராஜா இசையமைக்கும் பாடலில் அவரே கதாநாயகனாக இருப்பார். ஆனால், ஞானியின் இசை எஸ்.பி.பி.யின் குரலிலிருந்து வரும்போது இசைஞானி-எஸ்.பி.பி. என்ற இரண்டு கதாநாயகர்கள் உருவாகி இருப்பார்கள், திரையில் நாம் பார்ப்பதெல்லாம் மூன்றாம் கதாநாயகர்களே.

புன்னகை மன்னன் திரைப்படத்தில் ’என்ன சத்தம் இந்த நேரம்’ பாடல் ஒரு அலாதி அனுபவத்தை கொடுக்கக்கூடியது. ஏனெனில் மெட்டும் சரி, வரிகளும் சரி ஒருவிதமான அமைதியைக் கொண்டிருப்பது. ஆனால் அந்த அமைதியை தனது குரல் மூலம் எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு கொண்டுசேர்த்திருப்பார். அப்படிச் செய்வதெல்லாம் சாதாரண விஷயமல்ல.

புன்னகை மன்னன்
புன்னகை மன்னன்

தளபதி திரைப்படத்தில், ’ராக்கம்மா கையத்தட்டு’ பாடலை அமைதியாக ஆரம்பித்து, பாடலின் சரணத்தை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றிருப்பார் இளையராஜா. அந்த மீட்டரை சரியாகப் பிடித்து, வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஒளி விளக்கேற்று வரியிலும், வைக்கிற வனம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு நேராக வரியிலும் எஸ்பிபி அதகளம் செய்து கொண்டாட்டத்தை, அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.

அதேபோல், ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் அவரின் குரல் பகலிலும் ஒரு மாலையை கொடுக்கக்கூடியது. இந்த ஒரு பாட்டுக்காகவே அவரை தோளில் தூக்கிவைத்து ஆட வேண்டும்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் யாரின் ரசிகனாக இருக்கலாம். ஆனால், அவர்களது ரசிப்பு பயணம் சச்சினிடத்திலிருந்து ஆரம்பித்திருக்கும். அதுபோல்தான் எந்தப் பாடகருக்கும் யார் வேண்டுமானாலும் இப்போது ரசிகர்களாக இருக்கலாம் ஆனால், அவர்களது ரசிப்பு பயணம் எஸ்.பி.பி.யிடமிருந்து தொடங்கியிருக்கும். ஒரு விஷயத்தை தொடங்கிவைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

எஸ்.பி.பி.க்கு நமது அப்பா, அம்மாவின் காலமும் ரசிகனாக இருந்திருக்கும், நமது மற்றும் மனைவியின் காலமும் ரசிகனாக இருந்திருக்கும், நமது பிள்ளைகளின் காலமும் ரசிகனாக இருக்கும். வாழ்க்கைக்கான முப்பாலை திருக்குறள் எப்படி கொண்டிருக்கிறதோ அதேபோல் மூன்று காலங்களைக் கொண்டது எஸ்.பி.பி.யின் குரல்.

மூச்சை நிறுத்திவிட்ட அவர்தான் மூச்சே விடாமல் இரண்டு பாடல்களைப் பாடினார். அப்படி அவர் செய்தது எல்லாம் இந்த உலகத்தின் இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் எஸ்.பி.பி..

ஒருவன் ஒருவன் முதலாளி என்று அவர் ஆரம்பிக்கும்போது அந்தக் குரல் நமக்குள் ஒரு உணர்ச்சியைக் கொடுக்கும். அந்த உணர்ச்சியை எழுதி அடக்கிட முடியாது. விதைகளைக் கிழித்து வேர் முளைக்கும் அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன் என்று அவர் பாடுகையில், அந்த ’உடைத்து’ என்ற வார்த்தையை அவ்வளவு ஆணித்தரமாக உச்சரித்திருப்பார்.

அதனைக் கேட்கும்போது நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். ஒரு வார்த்தையை கொண்டு ஒரு பாடகரால் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்க எஸ்.பி.பி.யால் மட்டும்தான் முடியும்.

பல்லேலக்கா பல்லேலக்கா பாடல் மிக மிக கடினமானது. ஏனெனில் அந்தப் பாடலின் பல்லவி மெட்டு அவ்வளவு வேகமாக இருக்கும். மெட்டு இப்படி என்றால் நா. முத்துக்குமார் அந்த மெட்டுக்கு,

“சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி படுபடுவென போர்த்திய புல்வெளி தொட தொட தொட உடைகிற பனித்துளி சுட சுட சுட கிடைக்கிற இட்டிலி, தட தட தடவென அதிர்கிற ரயிலடி கடகடவென கடக்கிற காவிரி, விறுவிறுவிறுவென மடிக்கிற வெற்றிலை முறுமுறுமுறுவென முறுக்கிய மீசைகள் மனதில் இருக்குது மெய் மெய் மெய்” இப்படி எழுதியிருப்பார்.

ஸ்டைலிஷ் எஸ்பிபி
ஸ்டைலிஷ் எஸ்பிபி

இதனை சாதாரணமாக படிக்கும்போதே நாம் பல டேக்குகளுக்கு போவோம். ஆனால், இதனை மிக சர்வசாதாரணமாக எஸ்பிபி கடந்து சென்றிருப்பார். அவர் குரலில் வெளிவந்து மலைப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. அவரின் 40 ஆயிரத்திற்கு அதிகமான பாடல்கள் குறித்து சொல்ல வேண்டுமென்றால் இன்னும் ஒரு 400 வருடங்கள் அனைவருக்கும் ஆயுள் வேண்டும்.

இசையமைப்பாளர்களின் பாடகராக இருந்த எஸ்.பி.பி. 20-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் மாறி ஸ்கோர் செய்தார். சிகரம் திரைப்படத்தில் அவர் இசையமைத்த அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் அவ்வளவு தெம்பை கொடுக்கக்கூடியது.

’நான் போகிறேன் மேலே மேலே பூலோகமோ எந்தன் காலின் கீழே’ என்று பாடிவிட்டு அவர் சென்றிருந்தாலும் ஒட்டுமொத்த இசையுலகும் அவருடைய குரலின் கீழ்தான் நகரும்.

எஸ்.பி.பி.யின் குரல் மனிதர்களின் பிபியை கட்டுக்குள் வைக்க அதிகம் உதவியிருக்கிறது. திருக்குறள் மட்டுமில்ல, எஸ்.பி.பி. குரலும் மனிதர்களின் பொக்கிஷம்.

Last Updated :Sep 25, 2020, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.