ETV Bharat / sitara

மகள்களைக் கொண்டு உழவு செய்த விவசாயி: டிராக்டரை அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்!

author img

By

Published : Jul 26, 2020, 7:54 PM IST

Updated : Jul 27, 2020, 3:35 PM IST

விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் சோனு சூட்
விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் சோனு சூட்

அமராவதி(ஆந்திரா): ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து மகள்களைக் கொண்டு ஏறு பூட்டி, உழவு செய்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவியிருக்கிறார். இதுகுறித்து அறிந்த சோனு சூட், அந்த விவசாயியிடம் தங்கள் நிலத்தில், விரைவில் டிராக்டரில் உழவு செய்யலாம் என ட்விட்டரில் பதிவிட்டார். அதேபோல விவசாயி வீட்டுக்கு புதிய டிராக்டரை அனுப்பி வைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியைச் சேர்ந்த தக்காளி விவசாயி, நாகேஸ்வர ராவ். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டார். தற்போது பருவமழைக் காலம் என்பதால், மழை பெய்யத் தொடங்கியது. அதனைப் பயன்படுத்திக்கொள்ள அந்த விவசாயி முடிவு செய்தார்.

கையில் பணமில்லாததால் அவர் ஏறு பூட்ட மாடுகளை வாடகைக்கு வாங்க முடியவில்லை. விவசாயி ஆயிற்றே பின்வாங்காமல், தனது இரு மகள்களையும் வைத்து ஏறு பூட்டி, நிலத்தை உழவு செய்தார். அதனைப் பார்த்த ஊர்மக்கள் படிக்கும் பிள்ளைகளை இப்படி மாடுகள் போல் நடத்துவதைக் கண்டித்துள்ளனர். நிலத்தை தாயாக எண்ணிய அவருக்கு அது தவறாக தெரியவில்லை.

அதுகுறித்த காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டது. அப்படி அந்தக் காணொலியை பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் பார்த்துள்ளார்.

உடனே தனது ட்விட்டரில் அந்த காணொலியைப் பகிர்ந்து, ''அத்துடன் உங்களது நிலத்தை உழவு செய்ய விரைவில் ஒரு டிராக்டர் வந்து சேரும்" எனப் பதிவிட்டார்.

அதேபோல சோனு சூட் உறுதியளித்த நாளிலேயே, விவசாயியின் வீட்டுக்கு டிராக்டர் போய் சேர்ந்தது. அவரின் இந்தச் செயலுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, விவசாயி நாகேஸ்வர ராவின் இரண்டு மகள்களுக்குமான கல்விச்செலவை தான் ஏற்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் நாகேஸ்வர ராவின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது' - ஏ.ஆர்.ரஹ்மான்

Last Updated :Jul 27, 2020, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.