ETV Bharat / sitara

டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்கும் ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் நிறுவனம்

author img

By

Published : Nov 19, 2021, 1:38 PM IST

v
studio green

உண்மையான, கடின உழைப்பாளிகளுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தொடர்ந்து கிடைத்துவருகிறது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரமான கதைகள், வித்தியாசமான உள்ளடக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களைத் தயாரித்து, தொடர் வெற்றிகளைத் தந்து தமிழ் சினிமாவின் மதிப்பை உயர்த்தியுள்ளார்.

ஆர்யா நடிப்பில் வெளியான 'மகாமுனி', 'டெடி' திரைப்படங்கள் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளன. இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் வகித்துள்ள ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் தற்போது பிரபல யூ-ட்யூப் சேனலான ஃபைனலி (FINALLY) உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்கிறது.

டிஜிட்டல் தளத்தில் நுழைய விருப்பம்

இது குறித்து ஞானவேல் ராஜா கூறுகையில், "ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் எப்போதும் புதிய கதைகளை முயற்சிப்பதிலும், திறமையான புது இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவுமே விரும்புகிறது.

இதுபோன்ற உண்மையான, கடின உழைப்பாளிகளுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைத்துவருகிறது. டிஜிட்டல் தளம் உலகம் முழுதும், மிகப்பெரிய அளவில் விரிவடைந்துவருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை தனித்துவமான, பொழுதுபோக்கு, நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்துவரும் 'ஃபைனலி' (FINALLY) போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

சிறந்த கதைகளை வழங்குவதற்கான புதிய முயற்சி

தொடர்ந்து 'ஃபைனலி' சேனலைச் சேர்ந்த பாரத் என்பவர் கூறுகையில், "இது மாதிரியான நிகழ்வு தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை என்பதால் ‘FINALLY’ குழுவில் உள்ள எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம். ஒரு தயாரிப்பு நிறுவனம் யூ-ட்யூப் சேனலுடன் இணைகிறது.

ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம்ஸ் நிறுவனம் 'ஃபைனலி' சேனல் எதிர்காலத்தில் இனி டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் கூட்டாகச் செயல்படும். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சிறந்த கதைகளை வழங்குவதற்கான இந்தப் புதிய முயற்சிக்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதே சமயம் இதை மிகப்பெரும் பொறுப்பாகவும் நான் மதிக்கிறேன். பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென தனி யூ-ட்யூப் சேனல்களை வைத்திருக்கின்றன. ஆனால் ஞானவேல்ராஜா இந்த முறையிலிருந்து வெளியே வந்து, எங்களுடைய சேனல்கள் மூலம், இன்னும் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களைக் கொண்டுவர, எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

பார்வையாளர்களை மகிழ்விக்கும் மிகச்சிறந்த கதைகள்

தொடக்கத்தில் நாங்கள் யூ-ட்யூப் உள்ளடக்கங்களில் கவனம் செலுத்தவுள்ளோம், அதைத் தொடர்ந்து ஓடிடி, திரைப்படத் தளங்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கவுள்ளோம். பல்வேறு தளங்களுக்கான மிகச்சிறந்த கதைகளுக்கான ஆரம்பகட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும் ஸ்டியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா அனைத்து விஷயங்களிலும் முழு ஆதரவைத் தருவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளார். விரைவில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் மிகச்சிறந்த கதைகளை வெளியிடுவோம்" என்றார்.

இதையும் பாருங்க: ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியக்கும் நயன்தாரா தங்கமே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.