ETV Bharat / sitara

'குறைந்தபட்ச உரிமையை கேட்பதே தவறென்றால் இது ஜனநாயக நாடாக இருக்க முடியாது' - பா. இரஞ்சித்

author img

By

Published : Feb 26, 2020, 9:29 PM IST

Pa Ranjith about attack on CAA protesters at Delhi
Pa Ranjith about attack on CAA protesters at Delhi

சென்னை: ராஜா முரளிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நறுவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் பா. இரஞ்சித், டெல்லியில் நடந்துவரும் வன்முறை குறித்த தனது கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜா முரளிதரன் இயக்கத்தில் புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள 'நறுவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

இயக்குநர் பா. இரஞ்சித் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”பதற்றமான சூழலில் நாம் இங்கே கூடியிருக்கிறோம், மத ஃபாசிசத்தின் மூலம் திட்டமிட்டு சிறுபான்மையினரை அழித்துக் கொண்டிருக்கும் சூழலில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அட்டகத்தி படத்தின்போது மேடையில் பேச எனக்கு பதற்றம் இருந்தது. படப்பிடிப்பில் தொழிலாளர்களை நிறைய கொடுமைப்படுத்தியிருந்ததால், பட விழாவில் அவர்களுக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பதற்றத்தில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.

நாம் செய்த செயல் சரியானதாக இருந்தால் அதுகுறித்து மேடையிலும் சரியாக பேசி விடுவோம். சினிமாவில் படம் எடுப்பதைவிட, படத்தை வெளியிடுவதுதான் சவாலானது. திரைத்துறையில் சரியான வாய்ப்பு அமையாமல் வெளியில் பலர் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தமது சொந்த முயற்சியின் மூலமே வெற்றிபெற முடியும். தனித்தன்மை உள்ள சிறு முயற்சிகளை ஊடகங்களும், ரசிகர்களும் கைவிடமாட்டார்கள்” என்று பேசினார்.

இந்த இசை வெளியீட்டு விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா. இரஞ்சித் ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன் அரசு வன்முறையைக் கையிலெடுத்தது. தலைநகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆளும் அரசு இந்த வன்முறைகளை ஊக்குவிக்கிறது. குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை டெல்லியில் நிகழ்த்துவதற்கான முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டுவருகிறது.

நறுவி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்

இஸ்லாமியர்களின் மனதில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற வன்முறை முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச உரிமையை கேட்பதே தவறென்றால், இது ஜனநாயக நாடாக இருக்க முடியாது. பட்டியலினத்தவர்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது, ஆனால் அதை பிச்சை என்று சொல்லமுடியாது.

அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா , எம். சி. குருசாமி போன்ற தலைவர்கள் திராவிட இயக்கங்களுக்கு முன்பே பல சமூகநீதி செயல்பாடுகளில் பங்காற்றியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, வன்முறையை தடுப்பதில் தோற்றுவிட்டது” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக அக்கறை மிகுந்த படம் எடுக்கவே விருப்பம் - இயக்குநர் பா. இரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.