ETV Bharat / sitara

ஓஎன்வி விருது சர்ச்சை: பரிசுத் தொகையுடன் ரூ.2 லட்சம் சேர்த்து கேரள அரசுக்கு நிதியளித்த கவிப்பேரரசு!

author img

By

Published : May 29, 2021, 1:11 PM IST

Updated : May 29, 2021, 2:19 PM IST

ஓஎன்வி விருது சர்ச்சை
ஓஎன்வி விருது சர்ச்சை

13:03 May 29

சென்னை: ஓஎன்வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அதற்காக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையுடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் சேர்த்து, கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி பண்பாட்டு மையம் அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி அதனை வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வியைச் சார்ந்தவர்களையும் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

ஓ.என்.வி விருது சர்ச்சை: 'மீ டூ'வை வைத்து ஒதுக்கப்படுகிறாரா கவிப்பேரரசு!

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓஎன்வி பண்பாட்டு மையத்திற்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மலையாள மண் மீதும், அம்மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : May 29, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.