ETV Bharat / sitara

’கிம் கி டுக் ‘ எனும் சீதக்காதி

author img

By

Published : Dec 11, 2021, 3:43 PM IST

தென் கொரியத் திரைக்கலைஞர் ’கிம் கி டுக்’ இறந்து இன்றுடன்(டிச.11) ஒரு வருடம் ஆகிறது. அந்த ஒப்பற்றக் கலைஞனின் திரைமொழி,படைப்புகள், சிந்தனைகள் பற்றிய ஒரு பார்வை.

’கிம் கி டுக் ‘ எனும் சீதக்காதி
’கிம் கி டுக் ‘ எனும் சீதக்காதி

தற்காலத்தில் சினிமாவை, கலையாகப் பார்ப்பவர்களை முட்டாள்களாகவே பாவிக்கிறது இவ்வுலகம். சினிமாத் துறை என்பது பெரும் வியாபாரத்தைக் கொண்டது என்பது உண்மை தான்.

அதேவேளை, அதுவொரு ‘கலை வியாபாரம்’, அந்த வியாபரத்திற்கென்று தனி விதிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்க வேண்டும் என்பதே கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் கூற்று.

அது ஒரு பக்கம் இருக்க, சினிமாவை கலையாக அணுகித் திரைப்படம் எடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'பிரென்ச் நியூ வேவ் (French new wave)', ’டாக் மி 95(Dogme 95)' போன்ற மாற்று சினிமா அமைப்பு வாயிலாகவோ அல்லது தன்னிச்சையாக சுயாதினப் படைப்புகளை எடுத்து வரும் சுயாதின சினிமாக்காரர்களின்(Independent film makers) வாயிலாகவோ அத்தகைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

The net

’கிம் கி டுக்’ - இலக்கணம் வகுத்தக் கலைஞன்

உலக சினிமா வட்டரங்களில் கொரிய சினிமாவிற்கென்ற மரியாதையும், ரசிகர்களும் ஏராளம். அங்குள்ள பல படைப்பாளிகளில், ’கிம் கி டுக்’ மிகவும் வித்தியாசமான கலைஞர் என்றே சொல்லலாம். இவரின் திரைமொழி , மிக நுணக்கமானது.

இவரது காட்சி, கதாபாத்திரம், திரைக்கதை, தொழில்நுட்ப அமைப்பு என எதையும் இதுவரை எந்த திரைப்படத்திலும் கண்டிருக்க முடியாது. தொடக்க காலத்தில், கிம்மின் திரைப்படத்தை அணுகவோ, புரிந்துகொள்ளவோ முடியாததால் அவரது சொந்த நாட்டிலேயே அவர் பெரிதும் மதிக்கப்படவில்லை என்பது தான் கொடுமையான வரலாறு.

கிம் கி டுக் படங்களுக்கென்றுத் தனித் திரைமொழியும், கதாபாத்திரங்களும், உரையாடல்களும் இருக்கும். அதை அணுகவும், புரிந்துகொள்ளவும் நேரம் எடுக்கலாம். இச்சிக்கல்கள் எதையும் அவர் பெரிதாக பொருட்படுத்தியதில்லை.

Human,space,time and human...!

யாருக்காகவும் தன் திரைமொழியில் சமரசம் செய்ததில்லை. கிம் கி டுக் படங்களில் வசனங்கள் குறைவாக(சில நேரங்களில் இல்லாமல்) இருக்கும். சமூகக் கட்டமைப்பைக் கேள்வி கேட்க்கும் விதமாக இருக்கும். பல்வேறு சித்தாந்தங்களை தெளிவு கூற அணுகுமுறையை கொண்டிருக்கும். நம் சுயவாழ்வில் உள்ள அழுக்குகளை உள்ளுணரவும், அவற்றை சுத்தம் செய்யவும் தூண்டும்.

மனங்களின் உள்ளிருக்கும் பேரழுக்கை சுத்திகரிக்கும் படைப்புகள்

இவர் இயக்கிய '3ஐயன்(3 Iron)','டைம்(Time)’,’பேட் கை(Bad guy)','ப்ரீத்(Breath)' போன்றத் திரைப்படங்கள் , ஆண்-பெண் உறவின் சிக்கல்களை அணுகியும், அதன் கட்டமைப்பில் உள்ள அநீதி, சமத்துவமின்மை, காமம், காதல் ஆகியவற்றைப் பற்றிய உளவியல் அணுகு முறையை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்திருக்கும்.

Time

மனித வாழ்வு நெறிகள், கும்பல் மனநிலையின் ஆபத்து, வாழ்வின் சித்தாந்தங்கள் பற்றி விளக்கும் விதமாக இவர் இயக்கிய ‘ஹூமன், ஸ்பேஸ், டைம், அண்ட் ஹுமன்(Human, space, time and human)', 'ஸ்பிரிங், சம்மர், விண்டர், ஃபால் அண்ட் ஸ்பிரிங்(Spring, summer, winter, fall and spring)' படங்கள் அமைந்திருக்கும்.

தென்கொரிய - வடகொரிய எல்லை அரசியலை விளக்கும் விதமாக இவர் இயக்கிய ‘தி நெட்(The Net)’ திரைப்படம் அமைந்திருக்கும். இவரின் பெரும்பாலான படைப்புகளில் மனிதனுக்குள் பேரழுக்காய் தேங்கி நிற்கும் மிருகத்தன்மை, ஆதிக்க மனோபாவம், சுயநலம் போன்றவைகளை அணுகுவதாகவே இருக்கும்.

இவரின் திரைப்பட முதன்மை கதாபாத்திரங்கள் மிகக் கொடூரர்களாகவும் பல சமயத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பார்கள், சமூக விரோதிகளாக, சமூகத்தில் இருந்து விலக்கப்பட்ட அல்லது விலகிக்கொண்டவர்களாக திகழ்வார்கள்.

எனினும், அவர்களின் உளவியல், வாழ்வுமுறை, எண்ணவோட்டம், அவர்களிடமும் மிச்சமிருக்கும் மனிதத்தன்மை போன்றவைகளைப் பற்றி தன் திரைப்படங்களில் காண்பித்திருப்பார் இயக்குநர் கிம்.

இறந்தும் படைப்பால் அருள்வார்

இவரின் திரைப்படங்கள், வெனிஸ், பெர்லின், கான் போன்ற பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் வாங்கியிருக்கிறது.

இந்த ஒப்பற்றக் கலைஞனை ஆதர்சமாய் ஏற்றுக்கொண்ட உலகளாவிய இயக்குநர்கள் ஏராளம். அதில் ஒருவர், நமது கமல் ஹாசன். அதற்குச் சான்றாய், கிம் கி டுக்கின் இறப்பிற்கு அவர் பதிவிட்ட இரங்கல் செய்தி உள்ளது.

Spring ,summer,fall,winter and spring..!

’கிம் கி டுக்’ இன் மரணம் என்பது அவரின் உடலுக்குத் தான். அவர் திரைமொழியும், படைப்புகளும் வருங்காலக் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் கற்பித்தருளும்.

இவர் படைப்புகளால் என்றும் வாழ்வார் சீதக்காதியாய்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.