ETV Bharat / sitara

திரையரங்கில் சினிமா வெளியாகி 150 நாள் ஆகுதுங்கோ!

author img

By

Published : Aug 15, 2020, 4:31 AM IST

சென்னை: கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளில் சினிமா வெளியாகி நேற்றுடன் 150 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

திரையரங்கு
திரையரங்கு

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நேற்றுடன் (ஆக.14) 150 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதனால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நிறுவனங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், படப்பிடிப்பின் இறுதிக்கட்ட பணிகள் உள்ளிட்டவை செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், திரையரங்கம் திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் சினிமா பல்வேறு கட்டத்தைக் கடந்து டிஜிட்டல் உலகில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 10 படங்கள் வெளியாவதே கடினமாக இருந்தது அந்தக் காலம், தற்போது சரியான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் ஓர் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா சூழல், தமிழ்த் திரைப்படத் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. இந்த வேளையில் பல படங்கள் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

இப்படி டிஜிட்டல் தளத்தில் மக்கள் சினிமாவை பார்க்க தொடங்கினாலும், மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்வில் பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கியமாக இருப்பது திரையரங்கில் சென்று சினிமா பார்ப்பதுதான். சில ஆண்டுகள் வரை திரையரங்கில் ஓடிய திரைப்படங்களுக்கு 25 நாட்கள், 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டு கொண்டாடி வந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் சினிமா இறங்கி 150 நாட்கள் ஆகிறது என ஹாஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளத்தில் தங்களது ஆதங்கத்தை நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு திரைத்துறையில் பல்வேறு பிரச்னைகள் போராட்டங்கள் வந்திருந்தாலும் இத்தனை நாட்களும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்ததும் இல்லை, சினிமா வெளியீட்டை தள்ளிவைத்ததும் இல்லை. இதுவே முதல்முறை. உடற்பயிற்சிக் கூடம் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியது போல் திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டுமென திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.