தமிழ் முன்னணி நடிகர்களின் பொங்கல் வெளியீட்டு திரைப்படங்கள் ஒரு பார்வை!

author img

By

Published : Jan 13, 2022, 10:17 PM IST

Updated : Jan 14, 2022, 4:53 PM IST

d

தமிழ் சினிமாவில் வாராவாரம் படங்கள் ரிலீஸ் ஆனாலும் பண்டிகை நாள்களில் வெளியாகும் படங்களுக்கு இருக்கின்ற மவுசே தனி. அதுவும் பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் என்றால் நிச்சயம் ரசிகர்களுக்கு திருவிழாதான். அதனால்தான் எல்லா முன்னணி நடிகர்களும் தங்களது படங்கள் எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுவர். காரணம் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாள்கள் தொடர் விடுமுறை, குடும்பங்கள் சேர்ந்து எப்படியும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டமான நிகழ்வாக இருக்கும் என்பதே.

சென்னை: அப்படி 2000 முதல் 2021 வரை தமிழ் நடிகர்களின் பொங்கல் வெளியீட்டு படங்கள் குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பு இதோ...

2000

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் கண்ணுக்குள் நிலவு, பிரபு நடித்த திருநெல்வேலி, விஜயகாந்தின் வானத்தைப்போல உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் வானத்தைப்போல திரைப்படம் 21ஆம் நூற்றாண்டின் முதல் வெள்ளிவிழா படமாக அமைந்தது. இயக்குநர் விக்ரமன், விஜயகாந்திற்கு மிகப்பெரிய வெற்றியையும் புகழையும் இப்படம் பெற்றுத்தந்தது. குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தனர். விஜயின் கண்ணுக்குள் நிலவு வெற்றிபெறவில்லை.

2001

இந்த ஆண்டு விஜயும் அஜித்தும் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டது. விஜயின் ப்ரண்ட்ஸ், அஜித்தின் தீனா, விஜயகாந்தின் வாஞ்சிநாதன், சத்யராஜின் லூட்டி உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் தீனா, ப்ரண்ட்ஸ் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. குறிப்பாக ஃபேமிலி ஆடியன்சை இவ்விரு திரைப்படங்களும் கவர்ந்ததால் பொங்கல் பந்தயத்தில் இரண்டு படங்களும் முதலிடம் பிடித்தன. விஜயகாந்தின் வாஞ்சிநாதன் திரைப்படமும் பல ஊர்களில் சூப்பராக ஓடியது.

2002

இந்த ஆண்டு கமலின் பம்மல் கே சம்பந்தம், அழகி, அஜித்தின் ரெட், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் அழகி மென்மையான காதல் படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பம்மல் கே சம்பந்தம் கமலின் காமெடி பட வரிசையில் உருவாக்கப்பட்டிருந்ததால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அஜித்தின் ரெட் சுமார் ரகம்தான்.

2003

தூள், வசீகரா, அன்பே சிவம், சொக்கத்தங்கம் உள்ளிட்ட படங்கள் வெளியானகின. இதில் தூள் வர்த்தக ரீதியாகச் சக்கைப்போடு-போட்டது. கமலின் அன்பே சிவம் இப்போது எல்லோரும் சிலாகிக்கும் படமாக இருந்தாலும் ரிலீசானபோது யாருமே கண்டுகொள்ளவில்லை. விஜயின் வசீகரா படத்திற்கும் அதே நிலைதான். இந்த ஆண்டு ஒன்மேன் ஷோவாக வசூலில் தூள் கிளப்பியது தூள்.

2004

தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் சரவணன், எங்கள் அண்ணா, கமலின் விருமாண்டி, கோவில் உள்ளிட்டவை வெளியாகின. இதில் விருமாண்டி, எங்கள் அண்ணா ஆகியவை வெற்றிபெற்றன. கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் தோல்வியடைந்தது.

2005

இந்த ஆண்டு விஜயின் திருப்பாச்சி, சரத்குமாரின் ஐயா, தனுஷின் தேவதையை கண்டேன், ஆயுதம் உள்ளிட்டவை வெளியாக திருப்பாச்சி விஜய்க்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கே மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. விஜயின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது. ஐயா, தேவதையை கண்டேன் படமும் வெற்றிபெற்றன.

2006

இந்த ஆண்டு அஜித்தும் விஜயும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோதினர். அஜித் நடிப்பில் பரமசிவன், விஜயின் ஆதி நேரடியாக மோதின. இடையில் சிம்புவின் சரவணா வெளியானது. மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்பதை நிரூபித்தன. மூன்றுமே அட்டர் பிளாப் அடித்தன.

2007

இந்த ஆண்டும் அஜித் - விஜய் இருவரும் போக்கிரி, ஆழ்வார் படங்கள் மோதின. குறுக்க இந்த கௌசிக் வந்தா அப்படினு சொல்ற மாதிரி விஷால் தனது தாமிரபரணியை இறக்கினார். இதில் சொல்லி அடித்தார் விஜய். பாக்ஸ் ஆபிஸ் வசூல் எகிறியது. ஆழ்வார் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தாமிரபரணி ஸ்லீப்பர் செல்லாக வந்து ஹிட்டடித்தது.

2008

இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரமின் பீமா, சிம்புவின் காளை, பரத்தின் பழனி, மாதவனின் வாழ்த்துகள் ஆகியன வெளியாகின. இதில் பீமா பரவாயில்லை ரகத்தில் ஓடியது. மற்றவை திரையரங்கை விட்டே ஓடின.

2009

விஜயின் வில்லு, தனுஷின் படிக்காதவன் ஆகிய படங்கள் மோதின. இதில் வில்லு படம் போக்கிரி படத்தின் வெற்றி கூட்டணி என்ற எதிர்பார்ப்பில் பார்க்க வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் படிக்காதவன் பெரும் வெற்றிபெற்றது.

2010

இந்த ஆண்டு கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், தனுஷ் நடிப்பில் குட்டி ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ஆயிரத்தில் ஒருவன் ஆங்கில படங்கள் போன்று பிரமிப்பான படமாக இருந்தாலும் அப்போது யாராலும் ரசிக்கப்படவில்லை. இப்போது ஆஹா ஓஹோ என்று சிலாகித்தவர்கள் அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் குட்டி திரைப்படம் வெற்றிபெற்றது.

2011

இந்த ஆண்டும் தனுஷ், கார்த்தி படங்கள் மோதின. கூடவே விஜயின் காவலன் படமும் உள்ளேன் ஐயா என்றது. கார்த்தியின் சிறுத்தை படம் வெறித்தனமான வசூலை அள்ளியது. தனுஷின் ஆடுகளமும் வெற்றிபெற்றது. காவலன் ஆவரேஜாக ஓடியது.

2012

இந்த ஆண்டு விஜயின் நண்பன் படமும் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை படமும் நேருக்கு நேர் மோதின. இதில் இந்திப் படமான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றது. சேட்டை ஓரளவுக்கு வெற்றிபெற்றது.

2013

இந்த ஆண்டு மூன்று படங்கள் மோதின. ஆனால் வெற்றிபெற்றது யார் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். விஷாலின் சமர், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் , சந்தானம் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் கண்ணா லட்டு திண்ண ஆசையா வாகைசூடியது. சந்தானம், பவர்ஸ்டாரின் காமெடி கலாட்டா அனைத்து குடும்பங்களையும் வசியம் செய்து திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்தது. சமரும், அலெக்ஸ் பாண்டியனும் சோபிக்கவில்லை.

2014

இந்த ஆண்டு நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. மீண்டும் அஜித், விஜய் நேருக்கு நேர் மோதிய ஆண்டு. வேட்டி, சட்டை, நரைமுடி சகிதம் அதகளம் செய்த வீரம், விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் மோதின. என்னதான் அதிக திரையரங்குகளை ஜில்லா கைப்பற்றினாலும் போகப்போக வீரம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. ஆனால் இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமாக அமைந்தது.

2015

இந்த ஆண்டு விக்ரமின் ஐ, ஜி.வி. பிரகாஷ் நாயகனாக அறிமுகமான டார்லிங், விஷாலின் ஆம்பள ஆகிய படங்கள் வெளியாகின. எதிர்பார்த்தது போலவே ஐ திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றது. டார்லிங், ஆம்பள படங்கள் சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

2016

இந்த ஆண்டு நான்கு படங்கள் வெளியாகின. பாலாவின் தாரை தப்பட்டை, உதயநிதி ஸ்டாலினின் கெத்து, விஷாலின் கதகளி, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ரஜினி முருகன் பட்டையை கிளப்பியது. மற்ற அனைத்தும் தோல்வியைத் தழுவின.

2017

விஜயின் பைரவா, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் இரண்டு படங்களும் அந்த ஆண்டு தடம்பதிக்கத் தவறின. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான விஜயின் பைரவா கடைசியில் மீம்ஸ் டெம்ப்ளேட் ஆனதுதான் மிச்சம்.

2018

இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கடந்துசென்ற ஆண்டாகவே அமைந்தது. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களைச் சோதித்தன.

2019

இந்த ஆண்டுதான் தமிழ் சினிமா என்றால் என்ன என்பதை இந்த 21ஆம் நூற்றாண்டுக்கு நிரூபித்த பொங்கல். இரண்டு பெரும் திரை ஆளுமைகளின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. ரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் இரண்டு படங்களும் வெளியாகின. எப்படியும் ஒருபடம் மண்ணைக் கவ்வும் என்று விமர்சகர்கள் ஆருடம் கூறினர். ஆனால் நடந்தது வேறு. இரண்டு படங்களும் வரலாறு படைத்தன.

ரஜினியின் பழைய இளமைத் துள்ளலை கார்த்திக் சுப்பராஜ் ஒரு ரசிகராக இருந்து இப்படத்தில் கொண்டுவந்தார். அஜித் படங்களுக்கு பெண்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்பதை விஸ்வாசம் உடைத்தது. குடும்பம் குடும்பமாக வந்து தாய்மார்கள் ஆதரவு தந்தார்கள். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறாவளியாய் சுழன்றடித்து ஓய்ந்தன. மொத்தத்தில் தமிழ் சினிமா ஹேப்பி அண்ணாச்சி.

2020

இந்த ஆண்டு பொங்கலுக்கு மாமனாரும் மருமகனும் மோதினர். ரஜினியின் தர்பார் ஜனவரி 9ஆம் தேதி வெளியானது என்றால் தனுஷின் பட்டாஸ் ஜனவரி 15ஆம் தேதி வெளியானது. ஆனால் இதில் வெற்றி ரஜினிக்குத்தான்.

2021

இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்குச் சோதனை காலம் என்றே சொல்லலாம். கரோனாவின் பிடியில் சிக்கித்தவித்தது. இருப்பினும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே என்ற விதிகளுடன் வெளியானது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் காப்பானாக இப்படம் வெளியானது.

கரோனாவால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளில் ஒளி ஏற்றும்விதமாக இப்படம் வெளியானது. படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த படமாக இது அமைந்தது.

நீண்ட நாள்களுக்கு பிறகு கரோனா பயம் மறந்து ரசிகர்களை திரையரங்கு நோக்கி வரவழைத்து விஜயின் மேஜிக். இந்த ஆண்டுதான் இப்படி ஆகிவிட்டது; காத்திருப்போம் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில்...!

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

Last Updated :Jan 14, 2022, 4:53 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.