ETV Bharat / sitara

18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்.18இல் தொடக்கம்

author img

By

Published : Feb 10, 2021, 8:58 PM IST

18th chennai international film festival
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உறுப்பினர்கள்

டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு சற்று காலம் தாமதமாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழாவில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான், அல்போனியா, அங்கோலா உள்ளிட்ட 9 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

சென்னை: 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18இல் சென்னையில் தொடங்குகிறது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உறுப்பினர்கள் இதுகுறித்து கூறியதாவது:

சினிமா ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உள்பட) 92 திரைப்படங்கள் திரைப்பட விழாவில் பங்குபெற உள்ளன.

18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி, பிப்ரவரி 18 அன்று பிவிஆர் மல்டி பிளக்ஸின், சத்யம் திரையில் நடைபெறும். அதேபோல் பிப்ரவரி 25 அன்று பிவிஆர் மல்டி பிளக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், ககுவூ வாடிஸ், ஆய்டா?, லிசன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட் மற்றும் ரன்னிங் டூ தி ஸ்கை உள்ளிட்ட திரைப்படங்கள் 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.

கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற திரைப்படங்களும் திரையிடப்படும் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாடுகள் வரிசையில், ஈரான் 11, பிரான்ஸ் 6, ஹங்கேரி 4, சிலி 2, இந்திய பனோரமாவில் திரையிடப்பட்ட படங்களும், தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்படும்.

தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் 13 திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தப் போட்டிக்காக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில், லேபர், கல்தா, சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட் ஃபாதர், தி மஸ்கிடோ பிலாசபி, சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம் மற்றும் கன்னி மாடம் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எதியோப்பியா, கிர்கிஸ்தான், லெபனான், மோனோகோ, ருவாண்டா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.

திரை மற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களால் எட்டு கருத்தரங்குகள் நடத்தப்படும். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், சத்யம்,#8 திருவிக சாலை, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை சென்னை-14 என்னும் முகவரியில், பிப்ரவரி 12 லிருந்து காலை 10.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ராமர் அவதாரம் எடுக்கும் மகேஷ் பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.