ETV Bharat / opinion

தேசிய சுய சார்பைக் காப்பாற்ற, விவசாயியைக் காப்பாற்றுங்கள்

author img

By

Published : Feb 10, 2021, 9:59 PM IST

Rescue the farmer for national self reliance
Rescue the farmer for national self reliance

கடந்த 25 வருடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயிகளின் நிலையை மேம்படுத்த சரியான சீர்திருத்தங்கள் தேசத்திற்குத் தேவை. ஆனால், இப்போதைய வேளாண் சட்டங்கள், மாநிலங்களின் ஆலோசனையில்லாமல், விவசாயச் சங்கங்களின் ஒப்புதல் இல்லாமல் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதனால் சரியான சீர்திருத்தங்கள் என்ற பட்டியலில் அவை வருவதில்லை.

'ஹம் ஹி கிஷான்… ஹம் ஹி ஜவான்' (நாங்கள் விவசாயிகள்; நாங்கள் படைவீரர்கள்) என்ற முழக்கத்துடன் சர்ச்சைக்குள்ளான வேளாண்மைச் சட்டங்களை நீக்குவதற்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். படைவீரன் எல்லைகளைக் காப்பது போல விவசாயி தேசத்தின் உணவுப் பாதுகாப்பைப் பேணிக்காக்கிறான் என்பது யாராலும் மறுக்க முடியாத நிஜம். நமது நாகரிகத்தின் விதைகளைத் தூவ உதவியது விவசாயியின் ஏர்முனை; அதுதான் விவசாயத்தைத் தேசிய கலாசாரமாக்கியது.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, சுற்றி வளர்த்த பயிர்களை இயற்கைச் சீற்றங்கள் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிய போதெல்லாம் அல்லது சந்தை சக்திகள் தன்னை ஏமாற்றியபோதெல்லாம், விவசாயி அந்த அவலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வான். இல்லையென்றால் பூச்சிக்கொல்லி மருந்தால் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்வான். இப்போது போராட்டப்பாதையை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான் என்பதை நாம் யோசிப்பது நல்லது.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானவை என்று பிரதமர் மோடி வாதாடுகிறார். 1971ஆம் ஆண்டில் தேசம் முழுக்க இருந்த விவசாயிகளில் 51 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டரை ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக வைத்திருந்தனர். தற்போது அது 68 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்ற அவரது வாதம் சரிதான். மேலும், இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான அளவுள்ள நிலத்தை உடமையாகக் கொண்டிருப்பவர்கள் தேசத்தின் மொத்த விவசாயிகளில் 86 சதவீதத்தினர் என்ற உண்மையையும் அவர் கூறியிருக்கிறார். அந்த மாதிரியான சிறு, குறு விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பொருட்டு, நடுத்தரத் தரகர்கள் ஆக்ரமித்திருக்கும் சந்தைகளைச் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். தேசமெங்கும் ஒரே சீரான சந்தையைக் கொண்டுவந்தால், ஏழை விவசாயிக்கு அதனால் என்ன பயன்?

கடந்த 25 வருடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயிகளின் நிலையை மேம்படுத்த சரியான சீர்திருத்தங்கள் தேசத்திற்குத் தேவை. ஆனால், இப்போதைய வேளாண் சட்டங்கள், மாநிலங்களின் ஆலோசனையில்லாமல், விவசாயச் சங்கங்களின் ஒப்புதல் இல்லாமல் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. இதனால் சரியான சீர்திருத்தங்கள் என்ற பட்டியலில் அவை வருவதில்லை.

புதிய சட்டங்கள் தங்களின் இருத்தலையே இல்லாமல் ஆக்கிவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள். இந்தச் சட்டங்களினால் ஏதாவது மோசம் நிகழ்ந்தால் அதற்கான பொறுப்பு தன்னைச் சார்ந்தது என்று பிரதமர் பேசுவது சரியல்ல. மேலும் பல மோசங்களைத் தாங்கும் சக்தி விவசாயிகளுக்குச் சத்தியமாக இல்லை. தேசத்திற்கு நன்மை விளைவிக்கும் சட்டங்கள், மாநிலங்களோடும், விவசாயிகளோடும் கலந்து ஆலோசித்த பின்புதான், உருவாக்கப்பட வேண்டும். அதைவிட்டு தன்னிச்சையாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதை ஒரு கெளரவப் பிரச்சினையாக்கக் கூடாது.

விவசாயிகளின் நலனுக்கு அரசாங்கங்கள் உத்தரவாதம் கொடுக்கும் பட்சத்தில்தான் என்றும் பசுமைப் புரட்சி சாத்தியம். லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டதால்தான், தேசத்தில் பசுமைப் புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளுக்கு மூலாதாரமாக இருந்த வேளாண் சந்தைகளும், இந்திய உணவுக் கழகத்தின் கொள்முதல்களும் அப்போது நிஜமானது. வெண்மைப் புரட்சித் தந்தை என்று புகழ்பெற்ற வெர்கீஸ் குரியனின் நீண்டகாலத் தீர்க்கமான பார்வைதான் பால்பண்ணையைத் தேசத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெருந்தொழிலாய் மாற்றியமைக்க உதவியது. கிராமப்புற வளர்ச்சியில் அது பெரும்பங்கு வகித்தது. அதைப் போல, விவசாயத்திற்கான ஒரு தீர்க்கமான லட்சியப் பார்வையை மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொள்வது அவசியம்.

‘கார்ப்பரேட்கள்’ என்னும் பெருங்கொண்ட நிறுவனங்களுக்கு விவசாயத் துறையில் ஒரு ராஜபாட்டையை உருவாக்க வழிவகுக்கும் புதிய வேளாண் சட்டங்களினால், சந்தை அமைப்பு நொறுங்கிப் போய்விடும் என்று விவசாயி இனம் அஞ்சுகிறது. இந்திய உணவுக் கழகம் தானியங்களைக் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்னும் அமைப்பு வீழ்ந்துவிடும் என்றும் விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இப்போதைய போராட்டம் ஒருசில மாநிலங்களில் மட்டும்தானே நடக்கிறது என்று சொல்வதை நிறுத்திவிட்டு, போராட்டத்திற்குப் பின்னே அரசியல் ஆதாய நோக்கு இருக்கிறது என்று அதன்மீது கறையள்ளி வீசுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு, விவசாயத்தில் நாட்டைச் சுயச்சார்ப்புள்ளதாக்க விவேகமான உபாயத் திட்டத்தை வடிவமைத்து மேம்படுத்துவது நல்லது.

உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு வேளாண் விளைப்பொருட்களுக்கு மதிப்புக் கூட்டலை வளர்த்தெடுப்பதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை நபார்டு வங்கிக்கு (வேளாண்மை, கிராம வளர்ச்சித் தேசிய வங்கி) அளிக்கும் என்று கடந்த வருடம் மே மாதத்தில் மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். கிஸான் சம்மன் நிதி என்னும் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 1.15 லட்சம் கோடி போடப்பட்டது என்று மத்திய அரசு சொல்கிறது.

குளிர்சாதனச் சேமிப்பு வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அந்த நிதி மடைமாற்றம் செய்யப்பட்டிருந்தால், விவசாயிகள் பெரும்பலனை அடைந்திருப்பார்கள். உள்நாட்டுத் தேவைகளையும், உலகச் சந்தைகளில் இருக்கும் வாய்ப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும், தவறுகள் இல்லாத ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்க சிறப்பு அமைப்பு ஒன்றை நிறுவிட வேண்டும். டாக்டர் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின் படி, குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப்பதற்கும், அந்த விலைக்காகச் செலவழிக்கப்பட்ட தொகையை, வேளாண் விலைபொருட்களை ஏற்றுமதி செய்வதின் மூலம் மீட்கும் ஏற்பாடுகளை செய்வதற்கும் அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே இந்திய விவசாயி காப்பாற்றப்படுவான்.

இதையும் படிங்க: வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தது தவறா... பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.