ETV Bharat / opinion

ரயில் நிலைய கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வியாபாரிகள் கோரிக்கை!

author img

By

Published : Aug 25, 2020, 4:58 PM IST

Railway vendor
Railway vendor

கரோனா காரணமாக போக்குவரத்திற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வேயை நம்பியிருக்கும் கூலிகள், ரயில் நிலையங்களில் ஸ்டால் வைத்திருப்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் சந்திரகலா சவுத்ரி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்..!

டெல்லி: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பல துறைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வைரஸ் தொற்றுப் பரவுதலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் இந்திய ரயில்வேயும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்களது வாழ்வாதாரத்துக்காக, ரயில்வேயை சார்ந்திருக்கும் கூலிகள், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர தொழிலாளர்கள்தான், கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது, அவர்கள் உண்மையில் ரயில்வே தொழிலாளர்கள் இல்லை என்பதாலும், அவர்களால் ரயில்வே துறைக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்பதாலும், யாருமே அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இதன் காரணமாக, தொற்று நோய் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்கள் தாங்களாகவே சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் இவர்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கானப் பொருள்கள் கூட கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் எண்ணற்ற அரசியல் சலசலப்பிற்கு மத்தியில், அவர்களின் கஷ்டம் கவனிக்கப்படாமல், கோரிக்கைகள் செவி சாய்க்கப்படாமல் இருக்கின்றன.

ஈடிவி பாரத் தரப்பில், அந்த வியாபாரிகளின் யூனியனிடம் பேசுகையில், இதுபோன்ற சிக்கலான தருணத்தில் உண்மையாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து அகில பாரதிய ரயில்வே கான்-பான் லைசென்ஸ் நல அசோஷியேசன் தலைவர் ரவீந்நர் குப்தா கூறுகையில், “அரசு இன்னும் எவ்விதமான உதவியும் எங்களுக்கு அளிக்கவில்லை. பொது ஊரடங்கின்போது, ரயில்கள் முழுமையாக இயக்கப்படும் வரை முழு அளவுக்கு லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது கடைகளைத் திறக்கும்படி ரயில்வே அமைச்சகம் வற்புறுத்துகிறது.

ரயில் நிலையங்களில் கடைகள் வைத்திருப்பவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் பொருள்கள் உள்ளிட்டவற்றை தர வேண்டும் என்று அரசிடம் நாங்கள் வலியுறுத்துகின்றோம். இதுதவிர மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றுடன் 100 விழுக்காடு வரை லைசென்ஸ் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும், ஜூன் 1ஆம் தேதி முதல் கடைகளைத் திறக்கும்படி வியாபாரிகளை அரசு வற்புறுத்தியது. முழுமையான ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயங்காததால் வருவாய் இல்லாமல் அவர்கள் பசியால் இறந்து கொண்டிருக்கின்றனர். வியாபாரிகள் பெரும் இழப்புடன், பெரும் கடன்களுக்கும் ஆளாகி உள்ளனர்,” என்றார்.

சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால், இத்தருணத்தில் உணவு ஸ்டால்களை திறப்பதற்கான அவசியம் எழவில்லை என்று கூறும் அவர், “அரசு முறையான சுழற்சியில் அனைத்து ரயில்களையும் இயக்காதவரை மற்றும் இயல்பு நிலை திரும்பாதவரை லைசென்ஸ் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அதே போல மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணங்களும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

ரயில்வே வாரியத்தால் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களைவிடவும் ஏழ்மை நிலையில் இருக்கும் வியாபாரிகள், டிராலி தள்ளுபவர்களுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்காவது குறைந்த வருவாயை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா ஊரடங்கு காரணமாக, வியாபாரிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியா முழுவதும், 9 ஆயிரம் ரயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்கள் உள்ளன. இரண்டு லட்சம் பிரிவுகளில், 13 லட்சத்துக்கும் அதிகமான வியாபாரிகள் உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொருபுறம், இப்போது சிறப்பு ரயில்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் மட்டுமே பயணிப்பதால் பயணிகளின் சுமைகளை சுமக்கும் கூலிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிகள் இருக்கின்றனர். இதனிடையே அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் பெடரேஷனைச் சேர்ந்த பொதுச் செயலாளர் கோபால் மிஸ்ரா கூறுகையில், "இரண்டு வேளை கூட உணவு உண்ண முடியாத நிலையில் இருக்கும் அவர்களின் நிலை மோசமாக இருக்கிறது.

பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஜன் தன் கணக்கு உள்ளவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 1000 ரூபாய் மற்றும் மாநில அரசிடம் இருந்து 500 ரூபாயும் கிடைத்துள்ளது. பல ரயில்வே யூனியன்கள் சார்பில் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை மட்டுமே அவர்களுக்குப் போதுமானதல்ல.

ரயில்வேயை நம்பி தினமும் வருவாய் ஈட்டும் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் அரசு கொள்கைகள் வகுக்க வேண்டும். இத்தகைய ரயில்வே பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு 10,000 ரூபாய் நிதி உதவியாவது அரசு அளிக்க வேண்டும். ஆனால், அவர்களுக்குப் போதுமான உதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை. மீண்டும் ரயில்களை முழுமையாக இயக்குவது குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க கைகோர்க்கும் அரசியல் கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.