ETV Bharat / lifestyle

"வாட்ஸ்அப் செயலிக்கு நாங்கள் இந்த அனுமதியை இன்னும் அளிக்கவில்லை" - ரிசர்வ் வங்கி!

author img

By

Published : Aug 1, 2020, 5:41 PM IST

UPI permission not given to WhatsApp
UPI permission not given to WhatsApp

டெல்லி: முழு வீச்சில் பணப் பரிமாற்ற சேவையில் ஈடுபட வாட்ஸ்அப் செயலிக்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மூலம் பணம் அனுப்புவது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடையே மெல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது. இருப்பினும், இந்தக் கரோனா காலத்தில், பொதுமக்கள் அச்சம் காரணமாக வங்கி செல்வதைத் தவிர்த்து இணையம் மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, யுபிஐ எனப்படும் "Unified Payments Interface" ஐை பயன்படுத்தி பணப்பரிமாற்ற சேவையை கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பல்வேறு செயலிகளும் தற்போது வழங்கிவருகின்றன. இந்த ரேஸில் பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் செயலியும் இணையும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

சோதனை அடிப்படையில் தற்போது வாட்ஸ்அப் செயலி இந்த சேவையை வழங்கிவருகிறது. இந்தச் சூழலில், பணப் பரிமாற்றத்திற்கென்று தனியாக ஒரு செயலியைக் கொண்டிருக்காமல் இருப்பதாலும், பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களை இந்தியாவுக்கு வெளியே சேமிப்பதாலும் வாட்ஸ்அப் பணப் பரிமாற்ற சேவைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையின்போது, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை இந்தியாவிலேயே சேமித்து வைக்க தேவை நடவடிக்கைகளை எடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்திடம் NPCI, கடந்த 2019 நவம்பர் 1ஆம் தேதி வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி, அனைத்து பிரச்னைகளையும் 2020 மே 31ஆம் தேதிக்குள் சரி செய்ய ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப், பணப் பரிமாற்ற சேவையை முழுவீச்சில் தொடங்க NPCIயிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் செயலிக்கு அனுமதிகோரி ரிசர்வ் வங்கியிடம் NPCI கடிதம் எழுதியது. இருப்பினும், அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கும் இந்த வழக்கு விசாரணையின்போது, ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதியின்றி வாட்ஸ்அப் செயலி பணப்பரிமாற்ற சேவையை தொடங்காது என்று நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எட்டு தொழிற்துறையின் உற்பத்தி 15 விழுக்காடு வரை சரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.