ETV Bharat / jagte-raho

கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் பிணை மீதான் விசாரணை தள்ளிவைப்பு!

author img

By

Published : Aug 21, 2020, 10:19 PM IST

sayan manoj bail petition adjourned
sayan manoj bail petition adjourned

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயன், மனோஜ் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதன் விசாரணையில் இருவரின் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயன், மனோஜ் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் துறையினர், சயன், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயன், மனோஜ் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை பிணையில் விடுவித்தால், அரசுத் தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று தெரிவித்தார். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் பிணை வழங்க வேண்டியதற்கான அவசியம் எதுவுமில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து, சயன், மனோஜ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இருவரின் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.