ETV Bharat / jagte-raho

சென்னை அடையாறில் 2.5 டன் குட்கா பறிமுதல்: கோவில்பட்டி நபர் உள்பட 4 பேர் கைது

author img

By

Published : Dec 2, 2020, 6:58 AM IST

சென்னை: அடையாறில் வாகன சோதனையின்போது, 2.5 டன் குட்கா பொருள்களை சரக்கு லாரியில் கடத்திவந்த கோவில்பட்டி நபர் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

gutka
gutka

சென்னை அடையாறு இந்திராநகரில் சந்தேகத்திற்குரிய வகையில் வேகமாகச் சென்ற சரக்கு வாகனத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது நிற்காமல் வேகமாகச் சென்றது. அந்த வாகனத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு சரக்கு வாகனங்கள் வேகமாகச் சென்றதால், சந்தேகமடைந்த காவல் துறையினர் விரட்டிச் சென்று இந்திராநகர் டேங்க் அருகே மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர்.

அதில், பெட்டி பெட்டியாக ஹான்ஸ், பான் மசாலா, கூல் லிப் போன்ற போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2.5 டன் போதைப்பொருள்கள் என்பது தெரியவந்தது.

பின்னர், வாகனத்தின் உரிமையாளர் ராமசாமி (40), செல்வராஜ் (27), மதுரவாயல் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுநரான புஷ்பராஜ் (39), ராமசாமியின் ஓட்டுநர் இசக்கி முத்து (27) ஆகியோரைக் கைதுசெய்த அடையாறு காவல் துறையினர் கைப்பற்றப்பட்ட 2.5 டன் போதைப்பொருள்களை காவல் நிலையம் கொண்டுவந்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மளிகைக் கடையில் வேலை பார்த்த ராமசாமிக்கு, சரியான வருமானம் இல்லாததால், இடைத்தரகர்கள் மூலம் பெங்களூருவிலிருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்திவந்து, மதுரவாயலில் தனது சரக்கு வாகனத்தையே குடோனாக மாற்றி சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு குட்கா பொருள்களை விநியோகம்செய்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்
பறிமுதல்செய்யப்பட்ட குட்கா பொருள்கள்

2019ஆம் ஆண்டு மதுரவாயல் காவல் நிலையத்தில் குட்கா விற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று பிணையில் வந்த பின் அதிக பணம் சம்பாதிக்க இரண்டு சரக்கு வாகனங்களைச் சொந்தமாக வாங்கி குட்கா விற்பனைக்குப் பயன்படுத்தியும், கோவில்பட்டியில் உள்ள உறவினர் செல்வராஜை வரவழைத்து மேலும் இரண்டு பேரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டு குட்கா பொருள்களை விநியோகம்செய்தது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: வழக்குரைஞர் மீதான பொய் பாலியல் புகார் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.