ETV Bharat / international

புதினை பதம்பார்க்கும் கூலிப்படை! யார் இந்த ப்ரிகோஸின்?

author img

By

Published : Jun 24, 2023, 7:31 PM IST

Etv Bharat
Etv Bharat

ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போர் கொடி உயர்தியுள்ள வாக்னர் குழுவின் தலைவரான 62 வயதான ப்ரிகோஸின் சிறை வாசம் முதல் கிளர்ச்சியாளராக உருவெடுத்துள்ளது வரையிலுமான பயணத்தைக் காணலாம்.

ரஷ்யா: மேற்குலகை மிரட்டிப் பார்க்கும் ரஷ்யப்படைகளையே கதிகலங்க செய்துள்ள யெவ்ஜெனி ப்ரிகோஸின் யார்? பத்து வருடம் சிறைவாசம் அனுபவித்த குற்றவாளி வாக்னர் குழுவின் தலைவரானது எப்படி? ரஷ்ய அதிபரின் மாஸ்டர் செஃப் என செல்லமாக அழைக்கப்பட்ட ப்ரிகோஸின் புடினுக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்க காரணம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு இடையே ரஷ்யாவில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

ப்ரிகோசின் சோவியத் யூனியனின் இறுதி ஆண்டுகளில் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். சிறைவாசத்திற்கான காரணத்தை இதுவரையிலும் கூறாத பிரிகோசின், வெளியே வந்த பின்னர் ஒரு உணவகத்தை ஆரம்பிக்கிறார். அந்த உணவகம் பிரபலமாகவே ரஷ்ய அதிபர் புடினின் கவனத்தை ஈர்க்கிறது. அதனை தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி ரஷ்யா வந்தபோது அதிபர் புடின் ப்ரிகோஸினின் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இப்படி ஆரம்பித்த அவர்களின் நட்பு, நாளடைவில் வளர்ந்து ரஷ்யாவின் அரசு பள்ளிகள் மற்றும் ராணுவ உணவகங்களின் ஒப்பந்தங்களை ப்ரிகோஸின் கையகப்படுத்துகிறார்.

ஒது ஒருபக்கம் இருக்க ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைமையை ஏற்று ப்ரிகோஸின் பணியாற்ற தொடங்குகிறார். வாக்னர் குழு என்பது, ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர். உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் மறைமுகமாக அதிபர் புடினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குதான் ப்ரிகோஸின் வாகனர் குழுவின் தலைவராக எப்படி ஆனார் என்பதற்கு பதில் கிடைக்கிறது. அதாவது புடினின் நம்பக தன்மைக்கு உட்பட்டவர் ப்ரிகோஸின். ராஷ்ய ராணுவத்திற்கும் வாக்னர் குழுவின் ஆதரவு அவ்வப்போது தேவைப்படும். இதனால் அதிபர் புடினின் ஆதரவோடுதான் ப்ரிகோஸின் வாகனர் குழுவில் இணைந்திருக்க முடியும் என கனிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போரின்போது ரஷ்ய ராணுவப்படைகளுக்கு ஆதரவாக வாக்னர் குழு களத்தில் இறங்கி போர் புரிந்துள்ளது. ராணுவ வீரர்களை விட வாக்னர் குழுவில் இருந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் செத்து மடிந்துள்ளதாக அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ப்ரிகோஸின் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய அரசாங்கம் தங்களுக்கு தேவையான அணு, ஆயுத உதவிகளையோ பொருளாதார உதவிகளையோ செய்யவில்லை என ப்ரிகோஸின் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிற்காக வாக்னர் குழுவில் இருந்த பலர் உயிரிழந்த நிலையில் ரஷ்ய ராணுவமே தங்களை படையை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக ப்ரிகோஸின் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவத்திற்கு எதிரான போரை தான் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள ப்ரிகோஸின், அனைத்தையும் நான் துவம்சம் செய்வேன் என ஆவேசத்துடன் கூறியுள்ளார். ப்ரிகோஸினின் படை தனது அபாரத்தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் ப்ரிகோஸினை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ரஷ்யா ராணுவத்திற்கும் வாக்னர் குழுவுக்கும் இடையே பயங்கர தாக்குதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னிடம் உள்ள 25 ஆயிரம் வீரர்களை கொண்டு அனைத்தையும் செய்து முடிப்பேன் என 62 வயதான ப்ரிகோஸின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ரஷ்யா தற்போது பெரும் பதட்டமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபர் புடினோ, தனக்கு தானே ஆபத்தை ஏற்படுத்தி விட்ட மனநிலையில் வளர்த்த கிடா மார்பில் குத்திய கதையாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் வளர்த்து விட்ட புடினை எதிர்க்கும் ப்ரிகோஸின் குற்றவாளியா அல்லது ப்ரிகோஸினை தனது கை பாவையாக பயன்படுத்திய புடின் குற்றவாளியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மாஸ்கோ மீது படையெடுப்பு.. முதுகில் குத்தியதா வாக்னர் குழு? புதின் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.