ETV Bharat / international

பூடான் பொதுத் தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி! பொருளாதார நெருக்கடியை சமாளிக்குமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 9:27 PM IST

பூடான் பொதுத் தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி 30 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Bhutan's election
Bhutan's election

திம்பு : பூடானில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பூடானில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற அமைப்பு ரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டு அதன்படி அரசியலமைப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று முறை பூடானில் பொதுத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், சுற்றுலாவை பிரதான பொருளாதார அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் பூடானில் கரோனாவுக்கு பின் கடுமையான பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 47 தொகுதிகளை கொண்ட பூடான் நாடாளுமன்றத்திற்கு 4வது முறையாக பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயகம் மற்றும் பூடான் டெண்ட்ரெல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மக்கள் ஜனநாயகம் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார நெருக்கடியான சூழல் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், 47 தொகுதிகளில் 30 இடங்களை அக்கட்சி கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூடான் டெண்ட்ரெல் கட்சி 17 இடங்களை பிடித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், இது குறித்த ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் புதன்கிழமை (ஜன. 10) வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே மையம் கொண்டு இருக்கும் பூடானில் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பூடானில் அமைந்து உள்ள புதிய ஆட்சி அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யால் வாங்சுகின் கனவு திட்டமான பூஜ்ய கார்பன் மெகா நகரமான Gelephu-வை முன்னெடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவுக்கு பின்னர் பூடானில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி, போதிய வேலைவாய்ப்பு இன்மை, சுற்றுலா தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அரசு ஆட்டம் கண்டு இருந்தது. இதையே வாக்குறுதிகளாக அறிவித்து மக்கள் ஜனநாயக கட்சி மக்களிடையே பெருவாரியான வாக்குகளை பெற்று உள்ளது. ஆட்சி அமைப்புக்கு பின் இத்தகைய சூழலை எதிர்கொளும் சவாலை மக்கள் ஜனநாயக கட்சி எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவுடனான உறவில் விரிசல்! மாலத்தீவு சுற்றுலா வருமாறு சீன மக்களை அதிபர் வலியுறுத்தலா? உண்மை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.