ETV Bharat / international

எலான் மஸ்க்கின் மில்லியன் கணக்கான ட்விட்டர் ஃபாலோவர்கள் போலியானவர்களா? - அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Aug 21, 2023, 1:46 PM IST

Musk
கோப்புப்படம்

Elon Musk X followers: ட்விட்டரில் எலான் மஸ்க்கை 153 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் ட்விட்டரைப் பயன்படுத்தாதவர்கள், சந்தா செலுத்தாதவர்கள் என்றும், 4 லட்சத்து 53 ஆயிரம் பேர் மட்டுமே சந்தா செலுத்திய பயனர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர்(எக்ஸ்) நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை, ட்விட்டரில் 153 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். 400-க்கும் மேற்பட்டவர்களை மஸ்க் பின்தொடர்கிறார். இந்த நிலையில், மஸ்க்கை பின் தொடரும் ட்விட்டர் கணக்குகளில் பெரும்பாலானவை போலியானவை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தரவுகள்படி, எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோரின் கணக்குகள் செயலற்றவை என்றும், சந்தா செலுத்தாத பயனர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மஸ்க்கைப் பின்தொடரும் 153 மில்லியனுக்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்களில், சுமார் 42 சதவீதம் பேர் அல்லது 65.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு ஒரு பின்தொடர்பவர்கூட (Followers) இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பின்தொடர்பவர்களில், 0.3 சதவீதம் அல்லது 4,53,000 பேர் மட்டுமே சந்தா செலுத்தும் பயனர்கள் என்றும், 72 சதவீதம் பேர் அல்லது 112 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் கணக்கில் பத்துக்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க்கைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் ட்விட்டரைப் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

மஸ்கைப் பின்தொடர்பவர்களில் 62.5 மில்லியனுக்கும் அதிகமானோரின் கணக்கில் ஒரு ட்வீட் கூட இல்லை என்றும், 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் கணக்கில் பத்துக்கும் குறைவான ட்வீட்களையே பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அல்லது 38.9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு அவரைப் பின்தொடர ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 27-க்குப் பிறகு மஸ்க்கை பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல், மஸ்க்கைப் பின்தொடர்பவர்களில் 25 சதவீதம் பேர் அல்லது 38 மில்லியனுக்கும் அதிகமானோர், புதிய கணக்குகளுக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கும் டீஃபால்ட்டான புரொஃபைல் போட்டோவையே வைத்துள்ளனர். இந்த தரவுகளின்படி, மஸ்க்கைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானவர்கள் ட்விட்டரை பயன்படுத்ததாதவர்கள், போலியான கணக்கு கொண்டவர்களாக இருக்கலாம் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் 540 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர சந்தா செலுத்தும் பயனர்களைக் கொண்டிருப்பதாக மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அவரைப் பின்தொடர்பவர்கள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ட்விட்டர் தலைமையகத்தில் நிறுவப்பட்ட ராட்சத X லோகோ - சான் பிரான்சிஸ்கோ மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.