ETV Bharat / international

ஆர்ட்டெமிஸ்2: ஓரியன் விண்கலத்தை முதல்முறையாக பார்வையிட்ட விண்வெளி வீரர்கள்!

author img

By

Published : Aug 9, 2023, 12:00 PM IST

Astronauts
நாசா

Artemis2: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்2 திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தாங்கள் பயணம் செய்யவுள்ள ஓரியன் விண்கலத்தை முதல்முறையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆர்ட்டெமிஸ்2 திட்டம் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக நாசா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா: அமெரிக்கா கடந்த 1969ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தியது. அத்திட்டத்தின் மூலம், அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இத்திட்டத்தின் மூலம் முதல் முதலாக அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தார். அதன் பிறகு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு "ஆர்ட்டெமிஸ்"(Artemis) என பெயர் வைத்துள்ள நாசா, இதற்காக ஓரியன் என்ற விண்கலத்தையும் உருவாக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில், ஓரியன் விண்கலம் காலியாகவே நிலவின் பின்பக்கத்திற்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது. அப்போது, ஓரியன் விண்கலம் நிலவை மிகவும் அருகில் சென்று படம் பிடித்து அனுப்பியது.

இதையடுத்து, நாசாவும், கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நிலவுக்கு அனுப்பப்படும் நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா அறிவித்தது. அதன்படி, நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினரை 2024ஆம் ஆண்டில் இறுதிக்குள் நிலவுக்கு அனுப்ப நாசா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இக்குழுவினருக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நான்கு விண்வெளி வீரர்களும் தாங்கள் பயணம் செய்யவுள்ள விண்கலத்தை முதல்முறையாக பார்வையிட்டனர். வீரர்கள் கடந்த 7, 8ஆம் தேதிகளில் நாசாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இன்னும் முழுமையாக தயார் ஆகாத அந்த விண்கலத்தின் நிலையை ஆய்வு செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ஆர்ட்டெமிஸ்2 திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆர்ட்டெமிஸ்2 திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், இந்த ராக்கெட்டில் சில சிக்கல்கள் இருப்பதால் இதன் சோதனை தோல்வியடையும் பட்சத்தில் ஆர்ட்டெமிஸ்2 திட்டம் 2026ஆம் வரை கூட தாமதமாகலாம் என நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே ஓரியன் விண்கலத்தின் ஒலியியல் சோதனையை மேற்கொள்ளவும் விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 100 years of Disney:மிக்கி மவுஸ் முதல் டிஸ்னிலேண்ட் வரையிலான100 ஆண்டுகள்-படைப்பாற்றலின் உலகளாவிய கொண்டாட்டம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.