அல் ஜசீரா பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை!

author img

By

Published : May 11, 2022, 7:44 PM IST

al-jazeera

ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற அல் ஜசீரா ஊடகத்தின் பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில், இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதுதொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக, பிரபல அரபு மொழி செய்தி தொலைக்காட்சியான அல் ஜசீராவின் பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே(51) சென்றுள்ளார்.

அவருடன் பிற பத்திரிகைகளில் பணிபுரியும் சில செய்தியாளர்களும் சென்றுள்ளனர். ஷிரீன் அபு அக்லே, பத்திரிகையாளர் என்று அடையாளப்படுத்தும் வகையில் "PRESS" என்று பொறிக்கப்பட்ட உடை அணிந்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் முகாமில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

பாலஸ்தீனியர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அல் ஜசீராவின் பெண் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டார். அல்-குட்ஸ் செய்தித்தாளில் பணிபுரியும் மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் காயமடைந்தார்.

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில்தான் அபு கொல்லப்பட்டார் என்றும், பத்திரிகையாளர் என்று தெரிந்தும், அவரை குறி வைத்து முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபுவின் உடலை எடுத்துச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. கொல்லப்பட்ட செய்தியாளர் அபு பாலஸ்தீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.