ETV Bharat / international

53 வீரர்களுடன் மூழ்கியது நீர்மூழ்கிக் கப்பல் - இந்தோனேசியா  அறிவிப்பு

author img

By

Published : Apr 25, 2021, 1:01 PM IST

Indonesia navy
நீர்மூழ்கிக் கப்பல்

ஜகார்த்தா: பாலி தீவில் 53 ராணுவ வீரர்களுடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கிவிட்டது என இந்தோனேசியா கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த 'கே.ஆர்.ஐ. நங்கலா 402' என்ற நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 22ஆம் தேதி பாலி தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாயமானது.

கப்பலைத் தேடும் பணியில் அமெரிக்கா உள்பட பல முக்கிய நாடுகளின் கப்பல்களும், இந்தியாவின் டி.எஸ்.ஆர்.வி. என்ற நீர்மூழ்கிக் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டன. அதேபோல, அமெரிக்க உளவு விமானமான பி-8 போஸிடானும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டது.

தேடுதலின்போது, கப்பல் மாயமாகியிருக்கூடும் எனக் கருதிய இடத்தில் எண்ணெய் படலம் கண்டறியப்பட்டது. இது, கப்பலின் எண்ணெய் டேங்க் சேதம் அடைந்ததால் வெளியாகியிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டுவந்தது.

இரண்டு நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 53 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய இந்தோனேசிய கடற்படைத் தளபதி யுடோ மர்கோனோ, "பாலி தீவின் அருகே, காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சொந்தமான மசகு எண்ணெய் பாட்டில், குளிரூட்டும் குழாயின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன.

அதனால், கப்பல் மூழ்கிவிட்டதாக முடிவுக்கு வந்துள்ளோம். அதற்கான காரணம் தெரியவில்லை.

கப்பல் வெடித்திருந்தால், சுக்கு நூறாகச் சிதறியிருக்கும். அந்தச் சத்தம், கட்டுப்பாட்டு அறையில் உள்ள, 'சோனார்' சாதனத்தில் நிச்சயம் பதிவாகியிருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. கப்பல், 400 - 500 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, அழுத்தம் காரணமாக சில பாகங்கள் உடைந்திருக்கலாம்.

அவற்றில் சில பாகங்கள் தற்போது கிடைத்துள்ளன. கப்பலில் மூன்று நாள்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருந்துள்ளது. அதனால், அதிலிருந்த, 53 பேர் உயிருடன் இருக்கும் வாய்ப்பும் குறைவு" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இந்தியாவுக்கு உதவுங்கள்' - ஜோ பைடனுக்கு அழுத்தமளிக்கும் அமெரிக்கர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.